பாகிஸ்தான் அதிபர் முஷாரப் தனது ராணுவத் தளபதி பதவியை ராஜினாமா செய்யாமலேயே தேர்தலில் போட்டியிட வழி செய்யும் வகையில் அந்நாட்டுத் தேர்தல் விதி திருத்தப்பட்டதற்கு எதிராக சமூகநீதிக் கட்சியின் தலைவர் இம்ரான்கான் தொடர்ந்த வழக்கை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பாகிஸ்தான் அதிபர் முஷாரப் இரண்டு பதவிகளை வகிப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை விசாரித்து வரும் 9 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்யின் தலைமை நீதிபதி ராணா பகவான்தாசு "இம்ரான்கானின் மனு விசாரணைக்கு உகந்ததல்ல" என்று கூறி நிராகரித்தார் என்று பாகிஸ்தான் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய சமூகநீதிக் கட்சியின் தலைவர் இம்ரான்கான் தாக்கல் செய்த மனுவில், தேர்தல் விதிகளில் திருத்தம் செய்தது குறித்து தேர்தல் ஆணையர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் முஷாரப் தேர்தலில் போட்டியிட இருந்த தடை நீங்கியுள்ளது. இதைக் கண்டித்து பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளன.