கடந்த ஞாயிற்றுக் கிழமை மாவோயிஸ்ட் எதிர்ப்புத் தலைவர் கொல்லப்பட்டதையடுத்து கபிலவஸ்து மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறைகள் பற்றி விசாரிக்க உயர்மட்ட நீதி விசாரணைக் குழுவை நேபாள அரசு அமைத்துள்ளது.
நீதிபதி லோகேந்திர மாலிக் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள 3 பேர் விசாரணை குழுவில் வழக்கறிஞர்கள் புஷ்பராஜ் கொய்ராலாவும், நிராஜ் புன்னும் உள்ளனர்.
பாலுவதார் பகுதியில் உள்ள பிரதமர் கிரிஜ பிரசாத் கொய்ராலாவின் வீட்டில் நடைபெற்ற அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வன்முறையில் கொல்லப்பட்டவர்களுக்கு உடனடி இழப்பீடாக ரூ.10000 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவுகளை அரசே ஏற்றுக் கொள்ளும். வீடுகளை முழுவதும் இழந்தவர்களுக்கு ரூ.10000மும், பகுதி இழந்தவர்களுக்கு ரூ.5000மும் வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
அவசரக் கூட்டத்தில் பேசிய பிரதமர், வன்முறைக்குக் கண்டனமும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்களும் ஆறுதலும் தெரிவித்துள்ளார். மக்கள் வன்முறைகளுக்குத் துணைபோகாமல் அமைதி காக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையில் இன்று காலை நடைபெற்ற வன்முறைகளில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இத்துடன் வன்முறைகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு நீடிக்கிறது.