அதிபர் முஷாரஃப் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டால் மொத்தமாக ராஜினாமா செய்வோம் என்று எதிர்க்கட்சிகள் விடுத்துள்ள மிரட்டல்களுக்கு இடையில் அக்டோபர் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது!
அட்டவணைப்படி லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி, பெஷாவர் மற்றும் கியூட்டா பகுதிகளில் செப்டம்பர் 27ஆம் தேதியும், இஸ்லாமாபாத்தில் செப்டம்பர் 29 ஆம் தேதியும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம். அதேபோல அக்டோபர் 1 ஆம் தேதி மதியம் 12 மணிக்குள் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறலாம். அன்று நண்பகலில் ஆணையம் வேட்பாளர் பட்டியலை வெளியிடும். அக்டோபர் 6ஆம் தேதி எல்லாத் தொகுதிகளுக்கும் ஒன்றாக வாக்குப்பதிவு நடைபெறும்.
இதற்கிடையில், அதிபர் முஷாரஃப் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டால் தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை மொத்தமாக ராஜினாமா செய்வோம் என்று எல்லா முக்கிய எதிர்க்கட்சிகளும் எச்சரித்துள்ளன.
உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கமும் தனது கடுமையான கருத்துக்களை முஷாரஃப்பிற்கு எதிராகத் தெரிவித்துள்ளது. முஷாரஃப் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்யும் நாளன்று இஸ்லாமாபாத்தில் உள்ள தேர்தல் ஆணையர் அலுவலகத்திற்கு எதிரில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்று வழக்கறிஞர் சங்கத் தலைவர் முனிர் மாலிக் கூறியுள்ளார்.
மனித உரிமைகள் கண்காணிப்பகமும் முஷாரஃப் மீண்டும் போட்டியிடுவதைக் கண்டித்துள்ளது. இராணுவத் தளபதியாக நீடிக்கும் முஷாரஃப், ஐந்தாண்டுப் பதவியான நாட்டின் அதிபர் பதவிக்குப் போட்டியிட முயற்சிப்பது சட்டவிரோதமானது. நாட்டின் சட்ட நலன்களுக்குக் கேடானது என்று அந்ந அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்துவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள போதிலும், அடுத்த மாதம் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதிபர் பதவியை ஏற்கும் முன் தமது ராணுவத் தளபதி பதவியை அவர் ராஜினாமா செய்வார் என்று உச்ச நீதிமன்றத்தில் முஷாரஃப்பின் வழக்கறிஞர் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார்.
முஷாரஃப் இராணுவத் தளபதியாக உள்ளபோதே தேர்தலில் போட்டியிட நினைக்கும் போது, தேர்தல் ஆணையத்தை மோசடி செய்யத் தயாராகிறார் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அதிகாரி அலி டாயன் ஹாசன் கூறியுள்ளார்.