பாகிஸ்தான் அதிபர் தேர்தல் விதிகளில் திருத்தம் செய்வதற்கு தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் கூறியுள்ளது!
பாகிஸ்தான் அதிபர் முஷாரஃப், அந்நாட்டு ராணுவ தளபதி பதவியில் இருந்து கொண்டே மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு வகை செய்யுமாறு, தேர்தல் விதியை அந்நாட்டு தேர்தல் ஆணையம் அண்மையில் திருத்தியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதிபர் முஷாரஃப் இரண்டு பதவிகளை வகிப்பதற்குத் தடைவிதிக்கக் கோரியும் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தார்.
இந்த மனுவை நீதிபதி இரானா பகவான்தாஸ் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட நீதிமன்றக் குழு விசாரித்தது. அப்போது, அரசு அதிகாரிகள் தங்கள் பதவியிலிருக்கும் போதே தேர்தலில் போட்டியிடுவதை தடைசெய்வது போன்ற அடிப்படை தேர்தல் விதிகளில் திருத்தம் மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் கிடையாது என்று தனது கருத்தைத் தெரிவித்தது.