ஆப்பிரிக்காவில் மழையினால் பரவி வரும் காலரா உள்ளிட்ட நோய்களினால் ஏற்படும் அழிவிலிருந்து மக்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.நா. கூறியுள்ளது!
ஆப்பிரிக்க கண்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையினாலும், அதனால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தாலும் 270 பேர் இறந்துள்ளனர். ஒரு கோடி மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் தொடங்கிய மழை இம்மாதம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள சூடானில் 64 பேர் இறந்துள்ளனர். கானாவில் 49 பேர் நீர் நோய்களால் இறந்துள்ளனர்.
நைஜீரியா, டோகோ, ருவாண்டா, நைகெர், சோமாலியா, மொராக்கோ, மாரிட்டானியா, எதியோப்பியா, உகாண்டா ஆகிய நாடுகள் மழையினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நாடுகள் அவசர நிலையைப் பிரகடனம் செய்து சர்வதேச உதவியைக் கோரியுள்ளன.