வறட்சி அதிகரிப்பதாலும் பருவ நிலை மாற்றத்தாலும் உலகம் முழுவதும் 100 கோடி ஏழை மக்கள் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர்.
இது குறித்து ஐ.நாவின் அமைப்புகளில் ஒன்றான ஐசிஆர்ஐஎஸ்ஏடி இயக்குநர் வில்லியம் தார் விடுத்துள்ள அறிக்கையில், ஆசியா மற்றும் பசிபிக் பகுதியில் வசிக்கும் மக்கள் தொகையில் 18.30 விழுக்காடு ஏழை மக்கள் பாதிக்கப்படும் நிலையில், இந்தியாவில் 25.93விழுக்காட்டினரும், சீனாவில் 16.66 விழுக்காட்டினரும் பாதிக்கப்படுவதாகக் கூறியுள்ளார்.
வறட்சிக்கு எதிரான ஐ.நாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குழுவின் தலைவராக உள்ள தார், பருவநிலை மாற்றத்தால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக் குறித்து விரிவான ஆய்வு நடத்தியுள்ளார். இவர், வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் தங்களின் ஆய்வுகளைப் பருவ நிலை மாற்ற பாதிப்பிலிருந்து மக்களைக் காக்கும் வழிகளைக் கண்டறியும் திசைக்குத் திருப்பினால் ஏழைகளுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்க முடியும் என்று கூறுகிறார்.
"நமது புத்தாயிரமாண்டு மேம்பாட்டு இலக்குகளை அடையவோ, 2015ஆம் ஆண்டிற்குள் வறுமையைப் பாதியாகக் குறைக்கவோ வணிகம் எப்பொழுதும் போல உதவாது" என்று தார் கூறியுள்ளார்.
உலகத்தின் பல பகுதிகளில் ஏற்கெனவே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான அறிகுறிகள் தோன்றத் தொடங்கிவிட்டன. மற்ற தேவைகளுக்குத் தண்ணீர் அதிகம் செலவிடப்படுவதால் விவசாயத்திற்குத் தண்ணீர் கிடைப்பதில்லை.
"பருவ நிலை மாற்ற வெளிப்பாடுகளான வறட்சி, மண்வளம் குறைதல், உயிர்ச் சமநிலை அழிதல், நீர்ப் பற்றாக்குறை, நிலத்தடி எரிபொருள் பற்றாக்குறை ஆகியவற்றால் வறண்ட நிலங்களில் முதலீடு செய்யும் கட்டாயத்தில் உள்ள விவசாயிகளின் வாழ்க்கை மேலும் கடினமாகும் " என்று அவர் தெரிவித்துள்ளார்.