ஈரான்-பாகிஸ்தான்-இந்தியா (ஐபிஐ) குழாய் எரிவாயுத் திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட விலையை ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மறு நிர்ணயம் செய்ய வேண்டும் என்று ஈரான் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.
அதேநேரத்தில் ஜப்பானின் பன்னாட்டுச் சந்தை (ஜெசிசி) விலையில் ஏற்படும் மாற்றங்களுடன் ஒப்பிட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டால் அதை ஏற்றுக் கொள்வதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.
"இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்காக எங்களின் நிபுணர் குழுவினர் வருகிற 23 ஆம் தேதி ஈரான் செல்ல திட்டமிட்டுள்ளனர்" என்று பாகிஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இயற்கை வளங்கள் துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
"ஐபிஐ குழாய் வழியாக இறக்குமதி செய்யப்படும் எரிவாயுவின் விலை ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு கட்டாயமாக மாற்றியமைக்கப்படும் என்று ஈரான் வலியுறுத்துவதால் இத்திட்டத்தை மேற்கொண்டு செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஈரானின் ஒரு குழுவுடன் நடைபெற்ற விவாதங்கள் அண்மையில் முடிவுற்றுள்ளன. இப்போது எஙகள் குழுவினர் ஈரான் செல்லவுள்ளனர். இச்சிக்கலைத் தீர்ப்பதற்காக இந்திய நிபுணர்களையும் ஈரான் அதிகாரிகள் அழைத்துள்ளனர்" என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
இந்தப் பேச்சுக்கள் வெற்றிபெற்றால் எரிவாயு விற்பனை மற்றும் வாங்குதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக மற்றொரு குழுவை பாகிஸ்தான் அனுப்பி வைக்கும்.
ஜெசிசியை அடிப்படையாகக் கொண்ட விலை நிர்ணய முறைக்கு பொருளாதார ஒருங்கிணைப்புக்குழு (இசிசி) ஏப்ரல் 10 ஆம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜிஎஸ்பிஏ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு முதல் கட்டமாக 21 கோடி கியூபிக் மீட்டர் எரிவாயு பாகிஸ்தானுக்கு இறக்குமதி செய்யப்படும். இதற்காக பாகிஸ்தானும் ஈரானும் சரிசமமாகச் செலவிட்டு 72கோடி டாலர் செலவில் குழாய்களை அமைக்கவுள்ளன.
ஈரான் - பாகிஸ்தான் - இந்திய இடையே குழாய் செல்லும் வழி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதில் பாகிஸ்தான் கட்டுப்பாட்டிற்குள் உள்ள குழாய் அமைப்புகளுக்கான விலை இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இருந்தாலும் தோராயமாக 30 கோடி டாலர் செலவாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருவழிக் குழாய்ப் பாதைகளும் பரிசீலனையில் உள்ளன. பாதை இறுதி செய்யப்பட்டபிறகு குழாயின் நீளம் முடிவு செய்யப்படும் என்றும் அந்த உயரதிகாரி கூறியுள்ளார்.