இந்தியா - இலங்கை இடையில் அமைக்கப்படவுள்ள இருப்புப்பாதைத் திட்ட முன்வடிவு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள இரண்டாவது சார்க் போக்குவரத்து அமைச்சர்கள் மாநாட்டில் இறுதி செய்யப்படும் என்று இலங்கைப் போக்குவரத்து அமைச்சர் டல்லஸ் அலகப்பெருமா கூறியுள்ளர்.
"கடந்த மாதம் புதுடெல்லியில் முதலாவது சார்க் போக்குவரத்து அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றபோது, அடுத்த மாநாட்டை இலங்கையில் நடத்தவேண்டும் என்று நாங்கள் ஆலோசனை வைத்தோம். இந்த ஆலோசனை எல்லா உறுப்பினர்களின் ஒருங்கித்த ஒப்புதலைப் பெற்றது. இந்த மாநாட்டின்போது இருப்புப் பாதைத்திட்டம் மற்றும் படகுப் போக்குவரத்து ஆகியவற்றின் மீது உறுப்பினர்கள் தங்களின் இறுதி முடிவினை எடுப்பார்கள்" என்று அமைச்சர் கூறியதாக நாளிதழ் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
இந்தியா - இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் இருப்புப்பாதை இணைப்பை உருவாக்குவது, படகுப் போக்குவரத்தைத் தொடங்குவது ஆகியவற்றுக்கான திட்ட முன்வடிவுகள இரண்டாவது மாநாட்டில் முக்கியப் பொருள்களாகக் கொண்டுவரப்படும் என்று போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த இருப்புப்பாதை கொழும்பிற்கும் சென்னைக்கும் இடையில் கட்டப்படும். படகுப் போக்குவரத்து கொழும்பிற்கும் தூத்துக்குடிக்கும் இடையில் தொடங்கப்படும்.
கொழும்பிற்கும் தூத்துக்குடிக்கும் இடையில் படகுப் போக்குவரத்துத் தொடங்குவதற்க முன்பு முதல்கட்டமாக கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்று வந்த கொச்சின் - தலைமன்னார் படகுப் போக்குவரத்தை மீண்டும் தொடங்க கருத்துரைக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
இந்த இரண்டு திட்டங்களும் நிறைவேற்றப்பட்டால் இருதரப்பு உறவுகளும், இந்தியா - இலங்கை இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இணைப்பும் பலப்படும் என்றும் அமைச்சர் அலகப்பெருமா தெரிவித்தார்.