இந்தியாவில் மருத்துவப் பயன்களுக்காக உற்பத்தி செய்யப்படும் ஓப்பியம் பாப்பி என்ற போதைப்பொருள் கள்ளச் சந்தைகளுக்குத் திசை திருப்பப்படுகிறது. இதனால் சட்டவிரோதமாகப பெருகிவரும் போதைப் பொருள் வணிகம் குறித்து அமெரிக்கா தனது கவலைகளைத் தெரிவித்துள்ளது.
"மருந்துக்காகத் தயாரிக்கப்படும் ஓப்பியம் மற்றும் வேதிப்பொருட்கள் திசை திருப்பப்படுவது இந்தியாவின் மிகப்பெரிய சிக்கலாக உள்ளது. ஏனெனில் கடத்தப்படும் ஓப்பியம் கள்ளச் சந்தைகளுக்குச் செல்கிறது. இவ்வாறு மொத்த ஓப்பிய உற்பத்தியில் 30 விழுக்காடுவரை திசை திருப்பப்படுகிறது" என்று மிகப் பெரிய மருந்து உற்பத்தி நாடுகள் தொடர்பாக அமெரிக்கா அண்மையில் தயாரித்துள்ள அறிக்கை தெரிவிக்கிறது.
"போதைப் பொருள் உற்பத்தி செய்யப்படவில்லை என்று முன்பு நாம் கருதிய மிகப்பெரிய அளவிலான நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த ஓப்பியத்தை இந்தியச் சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் அண்மையில கண்டுபிடித்து அளித்துள்ளனர்" என்று அமெரிக்கச் சட்ட அமலாக்கத்துறை கூடுதல் துணைச் செயலர் கிறிஸ்டி மெக்காம்பெல் கூறியுள்ளார்.
போதைப் பொருள் தொடர்பான வன்முறை, குற்றம் மற்றும் ஊழல் நிறைந்த நாடுகளை வகைப்படுத்தும்போது, முறைகேடாக மருந்து கடத்தப்படும் மற்றும் மருந்து உற்பத்தி செய்யப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள போதைப் பொருள் குற்றங்கள் பெருகியுள்ள நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான், ஹெய்ட்டி, கெளதமாலா, ஈக்குவடார், டொமினிகன் குடியரசு, கொலம்பியா, பர்மா, பிரேசில், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுடன் இந்தியாவும் உள்ளது.
"இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ள நாடுகள் போதைப் பொருள் பயன்பாட்டை ஆதரிக்கின்றன என்று பொருள்கொள்ள வேண்டியதில்லை. போதைப் பொருள் நடமாட்டத்தைத் தடுக்கும் முயற்சிகளில் பின்தங்கியுள்ளன என்று குறிப்பிடலாம்" என்று கிறிஸ்டி மெக்காம்பெல் கூறியுள்ளார்.
"ஒரு நாடு ஒரு ஆண்டில் ஐந்தாயிரம் ஹெக்டேர் கெனாபிஸ் அல்லது ஆயிரம் ஏக்கருக்கும்மேல் ஓப்பியம் அல்லது கோகோ ஆகியவற்றைப் பயிரிட்டாலோ, அறுவடை செய்தாலோ அந்த நாடு ஒரு மிகப்பெரிய பொதைப் பொருள் உற்பத்தி செய்யும் நாடு என்று சட்டம் வரையறை செய்கிறது" என்று அவர் கூறியுள்ளார்.