அதிபர் தேர்தலுக்கான அட்டவணையை அறிவிக்க பாகிஸ்தான் தலைமைத் தேர்தல் ஆணையர் கூடுதல் அவகாசம் கேட்டுள்ளார் என்று பாகிஸ்தான் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதிபர் தேர்தல் அட்டவணையை உடனடியாக வெளியிட வேண்டும் என்ற அரசின் கோரிக்கையை ஓய்வுபெற்ற நீதிபதியான தலைமைத் தேர்தல் அதிகாரி காஜி முகமது ஃபரூக் நிராகரித்துள்ளார் என்றும், இப்போதுள்ள நாடாளுமன்றத்திலிருந்து அதிபர் முஷாரஃப்பின் மறுதேர்தல் தள்ளிப் போகலாம் என்ற முடிவுகளுக்குப் பின்னால் பணம் விளையாடியுள்ளது என்றும் அச்செய்திகள் தெரிவிக்கின்றன.
செப்டம்பர் 15 ஆம் தேதி அதிபர் தேர்தல் அட்டவணை வெளியிடப்படும் என்ற அரசின் எதிர்பார்ப்பிற்கு இந்த முடிவு பெருத்த வியப்பை அளித்துள்ளது.
புதிய நாடாளுமன்றத்தில் இருந்து இராணுவ ஆட்சியாளர் தேர்தலைக் கோரவேண்டும் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பெனாசீர் புட்டோவிற்கும், அதிபர் ஜெனரல் முஷாரஃப்பிற்கும் இடையிலான ஒப்பந்தத்தின் காரணமாக இந்த முடிவு ஏற்பட்டதாகச் சிலர் கருதுவதாகவும் செய்திகள் கூறுகின்றன.
தற்போதுள்ள தேர்தல் விதிமுறைகள்தான் தலைமைத் தேர்தல் ஆணையரின் முடிவு மாறியதற்கு முக்கியக் காரணம் என்றும் அவை கூறுகின்றன.
அதிபர் முஷாரஃப் இரு பதவிகளை வகிப்பது, அவரின் மறுதேர்தல் விவகாரம் ஆகியற்றுக்கு எதிரான மனுக்களை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், அதிபர் தேர்தல் விதிகளில் 63வது பிரிவை அமல்படுத்துவதை முக்கிய விசயமாகக் கவனிக்க வேண்டும் என்று கூறியிருந்தது.
தலைமைத் தேர்தல் ஆணையரை சந்தித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஷேர் ஆப்கான் நியாசி, சட்டத்தின் தேவைப்படி அதிபர் தேர்தல் அட்டவணையை அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் அதிபர் தேர்தலுக்குத் தேதியை நிருணயிக்க தலைமைத் தேர்தல் ஆணையர் மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.
இருந்தாலும், தேர்தல் அட்டவணையை ஆணையம் விரைவில் அறிவிக்கும் என்று அமைச்சரிடம் ஆணையர் உறுதியளித்தார் என்று நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.