தாய்லாந்து விமானம் ஒன்று 130 பயணிகளுடன் தரையிறங்கும் போது தீப்பிடித்து எரிந்ததில் 88 பேர் பலியாயினர். 42 பேர் படுகாயம் அடைந்தனர். பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.
தாய்லாந்தில் உள்ள 'ஒன்-டூ-கோ’ என்ற நிறுவனத்திற்கு சொந்தமான ’எம்.டி.-82' ரக ஜெட் விமானம் ஒன்று நேற்று காலையில் 130 பயணிகளுடன் பாங்காக்கில் இருந்து புறப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு (இந்திய நேரப்படி) புக்கெட் தீவில் விமானம் தரையிறங்கியது.
அப்போது, கன மழை பெய்து கொண்டிருந்தது. ஓடுதளத்தில் இறங்கிய விமானத்தின் சக்கரம் வழுக்கியது. கட்டுப்பாட்டை இழந்து ஓடு தளத்தை விட்டு இறங்கி அருகில் நின்ற மரத்தின் மீது விமானம் பயங்கரமாக மோதியது. இதில் விமானம் இரண்டாக பிளந்து தீப்பிடித்து எரிந்தது.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் புக்கெட் தீவின் துணை கவர்னர் வோரபோட் ராஜசிம்மா மற்றும் புக்கெட் மேயர் அஞ்சலி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.
விமானத்தின் அவசர வழி மற்றும் ஜன்னல் வழியாக சில பயணிகள் வெளியே குதித்தனர். தீயில் சிக்கி 66 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் பலி எண்ணிக்கை 88 ஆக உயர்ந்துள்ளது. 42 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.