மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை வீழ்த்தி கைப்பற்றும் ராணுவ ஆட்சி நாடுகளை எதிர்கொள்வதில் இந்தியாவிற்கு பிரச்சனை இல்லை என்று வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்!
தென் கொரியாவிலிருந்து புறப்படுவதற்கு முன் செய்தியாளர்களிடம் பிரணாப் முகர்ஜி இவ்வாறு கூறினார்.
அந்த தினத்தில் எந்த அரசு இருக்கிறதோ அதனுடன்தான் நாம் பேச முடியும், அந்தந்த நாட்டு மக்கள்தான் தங்களுக்கு தேவையான அரசு எது என்பதை முடிவு செய்யவேண்டும் என்று அவர் அந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.
தாய்லாந்தில் ஜன நாயகத்தை மீட்க நடைபெறும் போக்குகளையும் இந்தியா நெருக்கமாக கவனித்து வருகிறது என்று அவர் தாய்லாந்து பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
மற்ற நாடுகளில் உள்ள எந்த ஆட்சி முறையுடனும் இந்தியாவிற்கு பிரச்சனையில்லை என்று கூறிய பிரணாப் முகர்ஜி, மற்ற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட இந்தியா ஒரு போதும் விரும்பவில்லை என்று தெரிவித்தார்.