ஈராக்கில் பாதுகாப்பு விவகாரம் மேம்பாடு அடைந்து வருவதால் இந்த ஆண்டு இறுதியில் அங்கிருந்து 6,000 அமெரிக்க வீரர்கள் திரும்பப்பெறப்படுவர் என்று அதிபர் ஜார்ஜ் புஷ் அறிவித்துள்ளார்!
அதிபர் புஷ் இதனை தனது வாராந்திர வானொலி உரையில் தெரிவித்தார். ஈராக்கில் தீவிரவாத வன்முறையை அடக்குவதில் அமெரிக்கா வெற்றி பெற்றுள்ளதைத் தான் தனது இந்த முடிவு காட்டுகிறது என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
தீவிரவாதத்தை ஒழிப்பதில் எந்த அளவுக்கு வெற்றி அடைகிறோமோ அதைப் பொறுத்து படைகளைத் திரும்பப் பெறுவதன் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்றார் அவர்.
இதன் மூலம் அடுத்த ஆண்டின் மத்தியில் ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகளின் எண்ணிக்கை 130,000ஆகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படைக் குறைப்பு குறித்து பாதுகாப்பு செயலர் ராபர்ட் கேட்ஸ் கூறுகையில், அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகளின் எண்ணிக்கை 1 லட்சமாக குறைக்கப்படும் என்று கூறியுள்ளார்.