கிளாஸ்கோ விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு உதவியதாக குற்றம் சாற்றப்பட்ட இந்திய மருத்துவர் ஹனீஃபின் பணி விசாவை ஆஸ்ட்ரேலிய குடியேற்றத் துறை ரத்து செய்தது தவறு என்று ஆஸ்ட்ரேலிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!
தன்னுடைய பணி விசாவை ரத்து செய்தது தவறு என்று கூறி மொஹம்மது ஹனீஃபின் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த பிரிஸ்பேன் நீதிமன்ற நீதிபதி ஸ்பெண்டர், "மொஹம்மது ஹனீஃபின் விசாவை ரத்து செய்ய குடியேற்றத்துறை அமைச்சர் கெவின் ஆண்ட்ரூஸ் தேர்வு செய்த அடிப்படை தவறானது. தவறான சோதனையை நடத்தியதனால் அவர் சட்டப்பூர்வமான தவறை செய்துள்ளார்" என்று தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
ஹனீஃபின் விசாவை ரத்து செய்தது எந்தவிதத்திலும் நியாமில்லை என்று கூறிய நீதிபதி, இங்கிலாந்து காவல்துறை அளித்த தகவலின் அடிப்படையில் இம்முடிவை எடுத்தது தவறானது. அத்தாக்குதலில் சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகளுக்கும், ஹனீஃபிற்கும் குடும்ப ரீதியான, சமூக ரீதியான உறவு இருந்தது என்றாலும், அது எந்தவிதத்திலும் அவர் மீது குற்றம் சாற்றி விசா ரத்து செய்வதற்கு அடிப்படையாக எடுத்துக் கொண்டிருப்பது தவறு என்று நீதிபதி கூறியுள்ளார்.