Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் இந்தியாவிற்கே சாதகமானது : நியூயார்க் டைம்ஸ்!

அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் இந்தியாவிற்கே சாதகமானது : நியூயார்க் டைம்ஸ்!

Webdunia

, ஞாயிறு, 5 ஆகஸ்ட் 2007 (18:10 IST)
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை செயல்படுத்த உருவாக்கப்பட்ட 123 ஒப்பந்தம் இந்தியாவிற்கே மிகுந்த சாதகமாக இறுதி செய்யப்பட்டுள்ளது என்று நியூயார்க் டைம்ஸ் நாளேடு கூறியுள்ளது!

அமெரிக்க நாளிதழ்களில் முதன்மையான ஒன்றான நியூயார்க் டைம்ஸ், இந்திய அணு சக்தித் துறையின் அழுத்தத்திற்கு வாஷிங்டன் பணிந்துவிட்டது என்றும், அமெரிக்கா தரும் எரிபொருளைப் பயன்படுத்தி அணு ஆயுதத்திற்கான வெடிபொருளை உருவாக்கும் சாத்தியத்தை தடுப்பதற்கான எந்த அம்சமும் 123 ஒப்பந்தத்தில் இல்லை என்று தனது தலையங்கத்தில் எழுதியுள்ளது.

"இந்தியா இந்த ஒப்பந்தத்தினால் பெரிதும் பயனடையும். அமெரிக்கா மிகச் சிறிதளவே பயனடையும். எந்தவிதத்திலும் தனது அணு ஆயுத எண்ணிக்கையை இந்தியா பெருக்கிக்கொள்ளக் கூடாது என்கின்ற எந்த உத்தரவாதமும் பெறப்படவில்லை. அதுமட்டுமின்றி, இந்தியா அணுச் சோதனை நடத்தாது என்கின்ற எந்த உறுதிமொழியும் ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை" என்று நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது.

இந்தியாவின் அணு எரிபொருள் தேவைக்கு வாஷிங்டன் உதவிட வேண்டும் என்கின்ற உறுதி பெறப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவின் அணு எரிபொருள் தேவை எவ்வளவு என்பது குறித்து வெளிப்டையான எந்த விவரமும் ஒப்பந்தத்தில் இல்லை என்று கூறியுள்ள நியூயார்க் டைம்ஸ், துவக்கத்தில் இருந்தே இந்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை குறையுடையதாகவே இருந்தது.

123 ஒப்பந்தத்தின் மூலம் அது இன்னமும் மோசமாகியுள்ளது. இதனை காங்கிரஸ் (அமெரிக்க நாடாளுமன்றம்) நிராகரிக்க வேண்டும். புதிதாக பேச்சுவார்த்தை நடத்தி புதிய ஒப்பந்தத்தை உருவாக்கி அதன் மூலம் அணு ஆயுதப் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.

·ப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் தனது அயலுறவுக் கொள்கைக்கு ஏற்பட்ட தோல்வியை அடுத்து ஒரு பெரிய வெற்றியாக காட்டிக் கொள்வதற்கு அதிபர் புஷ் மேற்கொண்ட பெரும் முயற்சி இது என்று வர்ணித்துள்ள நியூயார்க் டைம்ஸ், அமெரிக்காவுடனான இந்த ஒப்பந்தம் அணு ஆயுதப் பரவல் தொடர்பான கொள்கையை தியாகம் செய்ததை நியாயப்படுத்த முடியாது என்று கூறியுள்ளது.

அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் நமது இறையாண்மைக்கு எதிரானது என்று பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் கூறிவரும் நிலையில், அமெரிக்காவின் முன்னணி செய்தித்தாள்களில் ஒன்று, அது இந்தியாவிற்கே சாதகமானது என்று காரணங்களை அடுக்கியுள்ளது கவனிக்கத்தக்கதாகும்.

Share this Story:

Follow Webdunia tamil