அல் கய்டா உள்ளிட்ட சர்வதேச பயங்கரவாத இயக்கங்களுடனும், உலக அளவில் போதைப் பொருள் கடத்தலிலும் தொடர்புடைய தாவூத் இப்ராஹிமை தங்களிடம் ஒப்படைக்குமாறு பாகிஸ்தான் அரசிற்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது!
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து வெளிவரும் தி நியூஸ் எனும் நாளிதழ் இச்செய்தியை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் வெளிநாட்டு புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ., அந்நாட்டின் போதைப் பொருள் தடுப்பு அமைப்பான டி.ஈ.ஏ. ஆகியன தாவூத் இப்ராஹிமை பிடிக்க பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம், அந்நாட்டு போதை தடுப்புப் படை, ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு ஆகியவற்றின் உதவியை நாடியுள்ளதாக அச்செய்தி கூறியுள்ளது.
தங்களுடைய கோரிக்கை கடிதத்தில், அல் கய்டாவிற்கு உதவும் பெரும்புள்ளியாக தாவூதை அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது மட்டுமின்றி, அவருக்கு எதிராக சர்வதேச காவற்படை சிவப்பு எச்சரிக்கை வெளியிட்டுள்ளதையும் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவின் போதைப் பொருள் தடுப்பு அமைப்பின் ஆய்வின்படி, தெற்காசியா, மத்தியக் கிழக்கு, ஆப்ரிக்கா வழியாக பெரும் அளவிற்கு இங்கிலாந்திற்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் போதைப் பொருட்களை தாவூத் இப்ராஹிம் அனுப்பி வருவதாகக் குற்றம் சாற்றியுள்ளது.
இந்த கோரிக்கைக்கு பதிலளித்து கடிதம் எழுதியுள்ள பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம், தங்களால் எந்தவிதத்திலும் உதவ முடியாது என்றும், ஏனெனில் தாவூத் இப்ராஹிம் என்ற பெயரில் பாகிஸ்தான் மண்ணில் யாரும் இல்லை என்றும் கூறியுள்ளது. (பி.டி.ஐ.)