ஆஸ்ட்ரேலிய காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்ட பெங்களூரு மருத்துவர் ஹனீஃப் இந்தியா வரும் வழியில் இன்று தாய்லாந்து வந்து சேர்ந்தார். இன்று இரவு ஹனீஃப் பெங்களூரு வந்து சேருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ விமான நிலைய தாக்குதல் சம்பவம் தொடர்பாக பெங்களூரு மருத்துவர் ஹனீஃப் கடந்த 2 ஆம் தேதி ஆஸ்ட்ரேலிய காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
விமான நிலைய தாக்குதல் சம்பவத்திற்கு உள்நோக்கமின்றி உதவியதாக ஹனீஃப் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஹனீப்பிற்கு ஆஸ்ட்ரேலிய நீதிமன்றம் பிணைய விடுதலை வழங்கியது.
ஆனால், ஆஸ்ட்ரேலிய அரசு ஹனீஃபின் விசாவை ரத்து செய்து மீண்டும் அவரை சிறையில் அடைத்தது. இந்நிலையில், ஹனீஃப் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஆஸ்ட்ரேலிய காவல் துறை கடந்த 27 ஆம் தேதி விலக்கிக் கொண்டது. இதைத் தொடர்ந்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.
விடுதலையான பெங்களூரு மருத்துவர் ஹனீஃப் இந்தியா வரும் வழியில் இன்று தாய்லாந்து வந்து சேர்ந்தார். அங்கு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது விடுதலைக்கு பாடுபட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார். இன்று இரவு ஹனீஃப் பெங்களூரு வந்து சேருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.