கோல்ட் கோஸ்டில் உள்ள கட்டடம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்த முயன்றதாக ஹனீஃப் மீது ஆஸ்ட்ரேலிய காவல்துறை மற்றொரு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.
இங்கிலாந்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்துவதற்காக நடந்த முயற்சியில் தொடர்பிருப்பதாக பெங்களூரைச் சேர்ந்த மொஹம்மது ஹனீஃபை ஆஸ்ட்ரேலிய காவல்துறையினர் கடந்த 2ஆம் தேதி கைது செய்தனர்.
எனினும் அவர் மீதான குற்றச்சாட்டிற்கு ஏற்ற ஆதாரம் ஏதும் இல்லாத நிலையில் அவரை பிணையில் விடுதலை செய்ய பிரிஸ்பேன் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், அவரது விசாவை ஆஸ்ட்ரேலிய அரசு ரத்து செய்துவிட்டது.
இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில், ஹனீஃபை இந்தியா கொண்டு வர மத்திய அரசு அதிகாரிகள் ஆஸ்ட்ரேலிய அயலுறவு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கோல்ட் கோஸ்ட்டில் உள்ள கட்டடம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்த முயன்றதில் ஹனீஃபிற்கு தொடர்பிருப்பதாக ஆஸ்ட்ரேலிய காவல்துறை குற்றம் சுமத்தியிருப்பதாக நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கு ஆஸ்ட்ரேலிய காவல்துறை மறுப்பும் தெரிவிக்கவில்லை. உறுதியும் செய்யவில்லை.
கைது செய்யப்பட்டு பிணைய விடுதலையில் இருக்கும் ஹனீ·ப் மீதான வலுவான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று ஆஸ்ட்ரேலிய காவல்துறை கூறி வரும் நிலையில், தற்போது மற்றொரு வழக்கு அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.