உலக அதிசயங்களுக்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இந்தியாவின் தாஜ்மகால் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
புத்தாயிரம் ஆண்டில் 7வது ஆண்டான இவ்வாண்டில் 7வது மாதமான ஜூலையில், 7வது நாளான இன்று அதாவது 07.07.07 என்று வரும் இந்த தேதியில் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் புதிய 7 உலக அதிசயங்கள் எது எது என்கின்ற பட்டியல் வெளியிடப்பட்டது.
உலகம் முழுவதிலும் உள்ள ஆர்வலர்கள் தொலைபேசி, செல்பேசியில் அனுப்பப்படும் எஸ்.எம்.எஸ்., இணைய தளம் மூலமாக வாக்களித்தல் என இந்த தேர்தலில் அனைவரும் ஆர்வமாக வாக்களித்தனர். தாஜ்மகாலுக்கு ஆதரவாக கோடிக்கணக்கான இந்தியர்களும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தாஜ்மஹாலின் ரசிகர்களும் வாக்களித்தனர்.
வாக்களிப்பு மூலம் உலக அதிசயங்களை நிர்ணயிக்க முடிவு செய்து அதற்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினத்துடன் முடிந்துவிட்டது. முடிவு நேற்று போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் வெளியிடப்பட்டது.
நேற்று அறிவிக்கப்பட்ட வாக்கெடுப்பில், அதிக அளவில் வாக்குகளைப் பெற்ற இந்தியாவின் தாஜ்மகால், உலகின் புதிய அதிசயங்கள் பட்டியலில் முதல் இடத்தை பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஆரம்ப காலத்தில் இருந்தே உலக அதிசயங்கள் பட்டியலில் இருந்து வரும் எகிப்து பிரமிடு, வாக்கெடுப்பு அடிப்படையில் இல்லாமல் சிறப்பு அந்தஸ்தில் புதிய 7 உலக அதிசயங்களில் ஒன்றாக ஏற்கனவே தேர்ந்து எடுக்கப்பட்டு விட்டது.
தாஜ்மகால்....
வாக்கப்பதிவில் வெற்றி பெற்றிருந்தாலும், பெறாவிட்டாலும் தாஜ்மஹால் எல்லோர் மனதையும் வெற்றி கொண்டிருப்பதை எவராலும், எப்போதும் மறுக்க முடியாது.
ஒரு பேரரசன், அதுவும் பல மனைவிகளைக் கட்டிக்கொள்ளலாம், பல பெண்களையும் வைத்துக் கொள்ளலாம் என்றவொரு தனித்த மத இன வழி பாரம்பரியத்தைச் சேர்ந்தவர், தனது மனைவியிடம் கொண்ட ஆழ்ந்த மாறாக் காதலை வெளிப்படுத்துவதற்கு ஒரு மாளிகையைக் கட்டியிருக்கலாம். ஒரு தோட்டத்தை அமைத்திருக்கலாம், அழகிய சிலையை வடித்திருக்கலாம், ஏன் அருமை உருதி மொழியில் கவிதையைக் கூட படைத்திருக்கலாம். ஆனால் மொகலாயப் பேரரசன் ஷாஜகான் தனது மனைவி மும்தாஜின் மீது கொண்ட காதலை, அந்தக் காதலின் அனைத்து பரிமாணத்தையும் உணர்வோடு ஒன்று கலந்துவிட்ட அனைத்து உணர்ச்சிகளையும் வெளியில் வடித்த அற்புதம்தான் தாஜ்மஹால்.
கட்டடக் கலைகளில் இந்தோ-மொகலாய கட்டடக் கலைக்கு பெரும் சான்றாகத் திகழும் தாஜ்மஹால், அதையும் தாண்டி பார்த்தவர், பார்க்காதவர், கேட்டவர், கதையால் அறிந்தவர், வரலாற்றால் உணர்ந்தவர் என்று எல்லோர் மனதிலும் அழியாக் காதல் சின்னமாகவே பதிவாகியுள்ளது.
இவ்வளவு அழகான இத்தனை சிரமத்தை எடுத்துக்கொண்டு தாஜ்மஹால் எனும் ஓர் அரிய படைப்பை ஓர் பேரரசன் விட்டுச் சென்றதற்குக் காரணம், தனது மனைவி மீது கொண்ட காதல்தான் என்பது காதலுக்கு மட்டுமல்ல, காதல் மணவாழ்க்கையிலும் நீடிக்கும் மறையாமல் தொடரும் உணர்வு அது, காமத்தைக் கடந்த பிணைப்பு அது, கருத்திற்கும் எட்டாத உணர்வு அது, காலத்தின் மாற்றத்தினால் காணாமல் போகக்கூடிய பண்பல்ல காதல் என்பதையே தாஜ்மஹாலின் படைப்பும், இருப்பும் உணர்த்துகிறது. அதனால்தானோ என்னவோ, ஆன்மிகப் பாதையில் மாமுயற்சி மேற்கொண்ட சிறீ அரவிந்தர், "அழியாக் காதலின் அற்புதச் சின்னம்" என்று இந்திய பண்பாட்டின் அடிப்படைகள் என்று தான் எழுதிய புத்தகத்தில் தாஜ்மஹாலைக் குறிப்பிடுகிறார்.