இங்கிலாந்தின் புதிய பிரதமராக தொழிலாளர் கட்சியின் தலைவரும், இந்தியாவை பெரிதும் விரும்புபவருமான ஜேம்ஸ் கார்டன் பிரெளன் பதவியேற்றார்!
பக்கிங்ஹாம் அரண்மனையில் நடந்த விழாவில் 56 வயது நிரம்பிய ஜேம்ஸ் கார்டன் பிரெளனை பிரமராக எலிசபெத் ராணி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
10 ஆண்டுக்காலம் தொடர்ந்து இங்கிலாந்து பிரதமராக இருந்த டோனி பிளேர் பதவி விலகியதையடுத்து இதுவரை அந்நாட்டின் கருவூலத்தின் வேந்தராக இருந்த பிரெளன், தொழிலாளர் கட்சியின் தலைவராக கடந்த ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றார்.
ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கிறித்தவ போதகரின் மகனான ஜேம்ஸ் பிரெளன், தனது 24 ஆண்டு அரசியல் வாழ்க்கையில் அந்நாட்டின் உயர் பதவியை அடைந்துள்ளார். இங்கிலாந்து அரசியலில் மதிப்புமிக்க அரசியல்வாதியாகத் திகழ்ந்துவரும் பிரெளன், இந்தியாவுடன் ஆழமான, பலமான உறவை ஏற்படுதிக்கொள்ள வேண்டும் என்ற கொள்கையுடையவர் மட்டுமின்றி, தான் பிரதமராகப் பொறுப்பேற்றால் தனது முன்னுரிமைகளில் ஒன்றாக அது இருக்கும் என்று கூறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.