ஆட்களை கடத்தி கொத்தடிமைகளாக வைப்பதும், பெண்களையும், சிறுமிகளையும் கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதும் உலகிலேயே இந்தியாவில்தான் மிக அதிகமாக நடைபெறுகிறது என்று அமெரிக்க அயலுறவு துறையின் ஆண்டறிக்கை கூறியுள்ளது!
ஆள் கடத்தலிலும், கட்டாய விபச்சாரத்திலும் 4வது ஆண்டாக இந்தியா முதலிடத்திலும், சர்வதேச அளவில் கண்காணிக்கப்பட வேண்டியதற்கான 2வது பட்டியலிலும் இந்தியா உள்ளதாக அமெரிக்க அயலுறவுத்துறை வாஷிங்டனில் நேற்று வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
அறிக்கையை வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசிய மனித கடத்தலை எதிர்ப்பது மற்றும் கண்காணிப்பதற்கான அலுவலகத்தின் இயக்குநர் மார்க் லாகன், இந்த அறிக்கைக்குப் பிறகாவது உரிய நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ளாவிட்டால் அதனை மேலும் தரம் தாழ்த்த வேண்டிய நிலை ஏற்படும் என்று கூறினார்.
கொத்தடிமை, விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது ஆகிய பிரச்சனைகள் குறித்து அமெரிக்காவுடன் இந்திய அரசு வெளிப்படையாகப் பேசி பிரச்சனைக்குத் தீர்வு காண முன்வர வேண்டும் என்று லாகன் கேட்டுக் கொண்டார்.
சௌதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கட்டார் ஆகிய அமெரிக்காவின் கூட்டாளி நாடுகளும் தரம்தாழ்ந்த பட்டியலில் (பட்டியல் 3) இடம் பெற்றுள்ளன. இவைகளுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை அறிவிக்க அமெரிக்க சட்டத்தில் இடம் உள்ளது.
பட்டியலில் 3ல் இடம் பெற்றுள்ள 16 நாடுகள் :
பஹ்ரைன், குவைத், ஓமான், கட்டார், அல்ஜீரியா, கினியா, மலேஷியா, சௌதி அரேபியா, ஈரான், சிரியா, சூடான், உஸ்பெகிஸ்தான், பர்மா, வட கொரியா, கியூபா, வெணிசுலா.
ஓரளவு தரம்தாழ்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவுடன் 75 நாடுகள் இடம்பெற்றுள்ளனவாம்.