பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பாப் உல்மர் மரணம் இயற்கையானது தான் என்று ஜமைக்கா காவல்துறையினர் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பாப் உல்மர் கடந்த மார்ச் மாதம் 18ஆம் தேதி இறந்தார். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்து அணியிடம் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்த நிலையில், பாப் உல்மர் மரணமடைந்தது, கிரி்க்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாப் உல்மர் மரணம் குறித்து விசாரணை நடத்திய ஜமைக்கா காவல் துறையினர், அவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிவித்தனர். பின்னர் விசாரணை நடத்திய ஸ்காட்லாந்து காவல்துறையினர் உல்மர் கொலை செய்யப்படவில்லை என்றும் அவர் மாரடைப்பால் தான் இறந்தார் என்றும் தெரிவித்தனர்.
இதனால் உல்மர் மரணம் குறித்த வழக்கில் குழப்பம் நிலவி வந்தது. இந்நிலையில் உல்மர் மரணம் இயற்கையானதுதான் என்று ஜமைக்கா காவல் துறையினர் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனால் சுமார் மூன்று மாத காலமாக நிலவி வந்த உல்மர் சர்ச்சை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.