கொழும்புவில் இருந்து தமிழர்களை பலவந்தமாக வெளியேற்றியுள்ள நடவடிக்கை சிறிலங்க அரசு கடைபிடித்து வரும் இனப்படுகொலையின் மற்றொரு செயல் திட்டமாகும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் கண்டனம் செய்துள்ளது!
இது குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் மனித உரிமை விவகாரங்களுக்கான பேச்சாளர் நவரூபன் செல்வி வெளியிட்டுள்ள அறிக்கையில், மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துமாறு அனைத்துலக சமூகம் குரல் கொடுத்து வரும் நிலையில் இன சுத்திகரிப்பு நடவடிக்கையை சிறிலங்க அரசாங்கம் மேற்கொண்டுள்ளது என்றும், இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஜப்பானிய சிறப்புத் தூதர் யசூசி அகாசி விவாதித்துக் கொண்டிருந்தபோது இத்தகைய செயல்பாட்டை சிறிலங்க அரசாங்கம் மேற்கொண்டுள்ளது தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பாக அதன் உண்மையான நிலைப்பாட்டை அனைத்துலக சமூக புரிந்துகொண்டிருக்கும் என்று கூறியுள்ளார்.
கடந்த அரை நூற்றாண்டுக் காலமாக சிறிலங்க அரசாங்கங்களால் தமிழ் மக்கள் இத்தகைய ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகி வருகின்றனர் என்று நவரூபன் செல்வி கூறியுள்ளார்.