இலங்கை தலைநகர் கொழும்பு விடுதிகளில் தங்கியுள்ள தமிழர்களை கட்டாயமாக வெளியேற்றும் சிறிலங்க அரசின் நடவடிக்கைக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது!
சென்ட்டர் ஃபார் பாலிசி ஆல்டர்நேட்டிவ்ஸ் (சி.பி.ஏ.) என்றழைக்கப்படும் ஒரு சுதந்திர சமூக ஆய்வு அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கொழும்புவி்ல் உள்ள வெல்லவெட்டா, பாலியகோடா, வட்டாலா ஆகிய பகுதிகளில் குறைந்த கட்டண தங்கு விடுதிகளில் இருந்து வரும் தமிழர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றுவதற்கு தடை விதித்துள்ளனர்.
இத்தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்த சி.பி.ஏ. அமைப்பின் பேச்சாளர், வழக்கு விசாரணையை ஜூன் 22 ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழர்களை வெளியேற்றுவதற்கு விதித்துள்ள இடைக்காலத் தடை உத்தரவை நடைமுறைப்படுத்துமாறு காவல்துறை தலைமை ஆய்வாளருக்கும், மேல் குறிப்பிடப்பட்டுள்ள 4 காவல் வட்டாரங்களின் பொறுப்பு அதிகாரிகளுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அயல்நாடுகளில் வேலை பெறுவதற்காக கொழும்புவிலும், அதன் புறநகர்ப் பகுதிகளிலும் உள்ள குறைந்த கட்டண தங்கு விடுதிகளில் ஏராளமான தமிழர்கள் தங்கியுள்ளனர். அவர்களில் 85 பெண்கள் உட்பட 376 பேரை கட்டாயமாக வெளியேற்றிய சிறிலங்க காவல் துறையினர் 7 பேருந்துகளை அவர்களது சொந்த ஊர்களான வவுனியா, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், திருகோணமலைக்கு நேற்று அனுப்பி வைத்தனர்.
இதற்கு சர்வதேச அளவில் பலத்த கண்டனம் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.