கொழும்பு நகரில் உள்ள விடுதிகளில் தங்கியிருந்த ஏராளமான தமிழர்கள் சிங்களப்படையினராலும், காவல் துறையினராலும் வெளியேற்றி விரட்டப்படுகின்றனர். இச்செயலுக்கு, இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இலங்கை தலைநகர் கொழும்பிலும், அதன் சுற்றுப் புறப்பகுதிகளிலும் வசித்து வரும் தமிழர்களால் அந்நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகக் குற்றம் சாட்டி இலங்கை அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது.
நேற்றுக் காலை இலங்கையின் புறநகர்ப் பகுதியான வெள்ளவத்தையில் உள்ள பல விடுதிகளில் தங்கியிருந்த தமிழர்களை கட்டாயப்படுத்தி விடுதிகளில் இருந்து வெளியேற்றி, அவர்களை மட்டக்களப்பு பகுதிக்கு கொண்டு சென்று இறக்கி விட்டனர்.
மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து வரும் தமிழர்கள் இனி கொழும்பு நகரில் தங்க கூடாது என்றும் காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொழும்பில் தங்கியுள்ள தமிழர்கள் இன்னும் 3 நாட்களுக்குள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும், இல்லையென்றால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் இலங்கை காவல் துறை எச்சரித்துள்ளது.
இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்க வேண்டும் என்று தமிழ் எம்.பி.க்கள் வலியுறுத்தினர். மேலும், விடுதிகளில் தங்கியிருந்த தமிழர்கள், விலங்குகளைப் போல நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டிய அவர்கள், கொழும்புவில் இருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.