Publish Date: Wed, 06 Jun 2007 (17:08 IST)
Updated Date: Wed, 06 Jun 2007 (17:08 IST)
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைக்கு கொண்டுவர 123 ஒப்பந்தத்தை விரைவாக இறுதி செய்ய விரும்புவதாக அமெரிக்கா கூறியுள்ளது!
வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அயலுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் ஷான் மெக்கார்மாக், புதுடெல்லியில் அமெரிக்க அயலுறவு அமைச்சகத்தின் சார்புச் செயலர் நிக்கோலாஸ் பர்ன்ஸ் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து விரைவில் 123 ஒப்பந்தம் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறினார்.
123 ஒப்பந்தம் உருவாக்குவதில் இந்தியா - அமெரிக்கா இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை மிகக் கடினமான பேரமாக இருந்தது என்று மெக்கார்மாக் ஒப்புக்கொண்டார்.
புதுடெல்லி பேச்சுவார்த்தையில் ஓரளவிற்கு முன்னேற்றம் ஏற்பட்டது என்றும், 123 ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்ய அமெரிக்கா விரும்புவதால் அந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மீண்டும் பேசுவோம் என்று மெக்கார்மாக் கூறியுள்ளார். (யு.என்.ஐ.)