இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைக்கு கொண்டு வர உருவாக்கப்பட வேண்டிய 123 ஒப்பந்தம் குறித்து நடந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றாலும், இன்னமும் தீர்வு காணவேண்டிய பிரச்சனைகள் உள்ளன என்று அமெரிக்கா கூறியுள்ளது!
வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அயலுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் ஷான் மெக்கார்மக், "புதுடெல்லியில் நடந்த பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இன்னமும் தீர்வு காண வேண்டிய பிரச்சனைகள் உள்ளன" என்று கூறினார்.
இந்திய அணு உலைகளுக்கு அமெரிக்கா அளிக்கும் யுரேனியத்தை பயன்படுத்திய பிறகு அதனை மறு ஆக்கம் செய்து பயன்படுத்தும் உரிமையை அளிக்க வேண்டும் என்று இந்தியா கோரி வருகிறது.
அதுமட்டுமன்றி, எந்த நிலையிலும் அணு எரிபொருள் வழங்கலை நிறுத்தக் கூடாது என்றும், தேச பாதுகாப்பிற்கு அவசியம் என்று கருதும் போது அணு ஆயுதச் சோதனை நடத்தும்பட்சத்தில் அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ளக் கூடாது என்றும் இந்தியா கூறி வருகிறது.
இம்மூன்று பிரச்சனைகளின் காரணமாக 123 ஒப்பந்தத்தை உருவாக்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது.
இந்த நிலையில், இவ்வார இறுதியில் ஜெர்மனியில் நடைபெறும் ஜி-8 மாநாட்டிற்குச் செல்லும் பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்க அதிபர் புஷ் உடன் இது குறித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (பி.டி.ஐ.)