சீனாவின் தென்பகுதியில் உள்ள யூன்னான் மாகாணத்தில் இன்று காலை ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தின் விளைவாக கட்டிடங்களும், வீடுகளும் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். 200 க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.
லாவோஸ், பர்மா எல்லைப்பகுதியில் உள்ள புயர் என்ற நகரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவுகோளில் 6.4 புள்ளிகளாக பதிவாகி உள்ளதாகவும் சீனத்தின் சிங்குவா செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இந்திய நேரப்படி இன்று காலை 11 மணி அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், பூமத்திய ரேகையில் இருந்து வடக்கே அட்சரேகை 23.012 டிகிரியும், தீர்க்கரேகை 101.054 டிகிரியும் சந்திக்கும் இடத்தில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு தாக்கியதாக அமெரிக்காவின் நிலவியல் ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்களும், வீடுகளும் பெருமளவிற்கு சேதமடைந்துள்ளதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. புயர் நகரத்தில் 30 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இங்கு ஏற்பட்ட நிலநடுக்கம் 200கி.மீ. சுற்றளவிற்கு உணரப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.
மேலும் செய்திகள் எதிர்பார்க்கப்படுகிறது.