இலங்கையில் சிறிலங்க ராணுவத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் நடந்துவரும் மோதல்கள் குறித்து கவலை தெரிவித்துள்ள அமெரிக்கா, இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண இருதரப்பினரும் முன்வர வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளது!
வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அயலுறவு அமைச்சகத்தின் துணை பேச்சாளர் டாம் கேசி, "சிறிலங்க மக்கள் அமைதியாக ஜனநாயக ரீதியிலான ஒரு நிர்வாகத்தின் கீழ் வாழ்வதற்கு உரிமையுள்ளவர்கள் என்றே தாங்கள் கருதுவதாகவும், ஆனால் அங்கு நடைபெற்று வரும் நிகழ்வுகள் அதனை உணர்த்துவதாக இல்லை" என்று கூறியுள்ளார்.
அமெரிக்க அயலுறவு அமைச்சகத்தின் தெற்காசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ரிச்சர்ட் பெளச்சர் இலங்கைக்குச் சென்றிருந்த போது அந்நாட்டு அரசிடமும், அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனும் அமைதி முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதாக கேசி கூறினார்.
இலங்கை இன மோதலிற்கு அமைதித் தீர்வு காணும் முயற்சிகளை ஊக்குவிக்க சிறிலங்க அரசுடனும், நார்வே அரசுடனும் இலங்கையின் மேம்பாட்டிற்கு உறுதியளித்துள்ள கொடை நாடுகள் அமைப்பின் உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்றப் போவதாகக் கூறிய கேசி, இப்பொழுது அங்கு நிலவும் சூழல் கடினமானதாக இருந்தாலும் அந்நாட்டு மக்களின் விருப்பத்திற்கு இருதரப்பினரும் பதிலளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதெனவும், எனவே அங்குள்ள இனங்கள் நிர்வாகத்தில் உரிய பங்கை பெறும் வகையில் அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டை உருவாக்க வேண்டும் என்றும் கூறினார்.