திரு. தேவசகாயம் அவர்கள் பற்றி ஏற்கனவே ஒரு பேட்டியில் விவரங்கள் தரப்பட்டுள்ளது என்றாலும், நகர மேம்பாட்டுத் துறையில் அவர் நீண்டகாலம் பணியாற்றியவர். சண்டிகர் நகரினுடைய மேம்பாட்டு ஆணையராக இருந்தவர். நகர மேம்பாடு தொடர்பான விடயங்களில் நிபுணத்துவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்.வெப்துனியா.காம் : ஒரு முக்கியமான திட்டத்தை தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். அது என்னவென்றால், சென்னையில் ஓடிக்கொண்டிருக்கும் கூவம் நதியை தூய்மைப்படுத்தப் போகிறோம், அதற்கு சிங்கப்பூரில் ஓடிக்கூடிய நதியையும், லண்டனில் ஓடக்கூடிய தேம்ஸையும் உதாரணம் காட்டி, அதனைப் போல் கூவம் நதியையும் தூய்மைப்படுத்தி, அழகூட்டப்போவதாகக் கூறியுள்ளார். அதற்கு ஒரு மாடல் வைத்து, அது செய்தியாக வந்துள்ளது. கூவம் நதியை தூய்மைப்படுத்துவது அவசியம் என்றாலும், அதுவொரு முன்னுரிமைத் திட்டமாக சென்னையில் நிறைவேற்றப்படுவது குறித்து, நீண்டகாலமாக நகரமயமாதல், நகர வளர்ச்சி ஆகியனப்பற்றி கருத்துரைகளை வழங்கியுள்ள தங்களுடைய கருத்து என்ன? எம்.ஜி. தேவசகாயம் : கூவம் சென்னையைப் பொறுத்தமட்டில் ஒரு சாபக்கேடு மாதிரி ஆகியிருக்கிறது. இது ஒரு நதி, நல்ல தண்ணீர் ஓடி, குளிக்கவும், படகு போக்குவரத்து நடத்தவும் பயன்படுத்தியும் சாதாரண நதியாக இருந்தது. இன்றைக்கு முழுவதுமாக சாக்கடையாக இருக்கிறது. அதுவும் பல பத்தாண்டு காலங்களாக மேலும் மேலும் சாக்கடையாக மாறிக்கிட்டிருக்கிறது. அதை சரி செய்து மீண்டும் அதே பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு கடந்த 40, 50 வருடங்களாக அரசு 3 திட்டங்களைத் தீட்டி அதில் முழுவதுமாக தோல்வியைக் கண்டிருக்கிறது. இப்பொழுது திரும்பவும் திட்டம் தீட்டுகிறேன். சிங்கப்பூரைப் பார்த்து போடுகிறோம், ஹூஸ்டன் அமெரிக்காவைப் பார்த்துப் போடுகிறோம் என்று சொல்கிறார்கள். அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்துக் கமிட்டி போட்டிருக்கிறோம். அந்த கமிட்டி போட்டிருக்கிறதால எல்லாம் சரியாக நடக்கும். இந்த தடவை திட்டத்திற்குப் பிரச்சனை இருக்காது என்று சொல்கிறார்கள். ஆனால், இது என்ன திட்டம், எப்படிப்பட்ட திட்டம் என்பது பற்றி இன்னும் இதுவரை தெளிவாக வெளிவரவில்லை. ஆனால், ஒன்று மட்டும் சொல்ல வேண்டும். இந்த திட்டம் 100 விழுக்காடு தோல்வியடைக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. ஏனென்றால், இப்ப அது கூவம் Beautification Project. கூவத்தை அழகுபடுத்துதல். கூவம் ஒரு பெண் அல்ல. அழகுபடுத்துவதற்கு. கூவம் வந்து ஒரு Utility. ஒரு நதி. அதனுடைய சுற்றுப்புறச் சூழல் மிகவும் அழிந்து போயிருக்கிறது. அதை சரி செய்ய வேண்டுமானால், வேறு விதமாக அணுக வேண்டும். அழகுபடுத்துவது என்று சொல்வதால், இந்த திட்டம் எந்த திசையில் செல்லும் என்பது தெரியவில்லை. அதனால், இந்த திட்டம் பற்றி முழு விவரம் வரும் வரை தெளிவாக ஒரு கருத்து கூறமுடியாது. தமிழ்.வெப்துனியா : இவ்வளவு பெரிய சென்னை மாநகரில் ஓடக்கூடிய கூவம் நதியில் பல்வேறுப்பட்ட கழிவுகள் கலப்பதால்தான் கூவம் இந்த அளவிற்கு கெட்டுப்போனது. ஏனென்றால், ஒருகாலத்தில் அது நல்ல நதியாக இருந்திருக்கிறது என்று நீங்கள் கூறினீர்கள். இப்பொழுது இவ்வளவு பெரிய நகரத்தினுடைய மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் தராமல், ஒரு முன்னுரிமைத் திட்டமாக கூவத்தை தூய்மைப்படுத்துதல் அல்லது அழகுபடுத்துதல் என்பது சரியானதா இருக்கிறதா?
தேவசகாயம்: மிகவும் முக்கியம். சென்னையைப் பொறுத்தமட்டில், மற்ற எல்லா திட்டங்களையும் விட கூவத்தையும், அடையாற்றையும் சுத்தப்படுத்துதல் மிகவும் முக்கியம். அதற்கு மூன்று காரணங்கள் உள்ளன.
ஒன்று, சுற்றுப்புறச் சூழல் முழுவதுமாக அழிந்து போய்க்கொண்டிருக்கிறது. இரண்டாவது, இது சாக்கடையாக மாறி நதி ஓட்டம் இல்லாததனால், பெரும் வெள்ளம் வரும் காலத்தில் சரியான வடிகாலாக இல்லாத நிலை. அது பல ஆண்டுகளாக மக்களை கஷ்டப்படுத்திக் கொண்டு இருக்கிறது. கோட்டூர்புரம் போன்ற பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குப் போல... பல இடங்களில். மூன்றாவது, கொசுத் தொல்லை. சென்னையில் உள்ள கொசுக்களுக்கு காரணமே கூவமும், அதுபோன்ற நதிகளும்தான். சுற்றுச் சூழல், பொது நலம், வெள்ளக் கட்டுப்பாடு (Environment, Public Health and Flood Control) இந்த மூன்று காரணங்களுக்காகவே கூவத்தை சுத்தம் செய்து முன்பு இருந்தது மாதிரி கொண்டு வருவது மிகவும் முக்கியமானது. தமிழ்.வெப்துனியா: இங்கு வந்திருந்த பகோடா மேயர் பெனலோசா கூறியதுபற்றி உங்களுடைய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தீர்கள். இந்த நகரத்தினுடைய மேம்பாட்டிற்கும், அதனுடைய இயக்கத்திற்கும் (Mobility, அந்த வார்த்தையைத்தான் நீங்கள் பயன்படுத்தியிருக்கிறீர்கள், Transportation அப்படின்னு நீங்கள் சொல்லவில்லை) இயக்கம் அப்படின்னு வரும்போது, அந்த இயக்கத்தை துரிதப்படுத்துவதற்கும், நிறைய மக்கள் போக்குவரத்திற்கும் உபயோகமாக இருப்பது பெரிய பெரிய மேம்பாலங்கள் அல்ல. மாறாக, நடைபாதைகளையெல்லாம் பெரிதாக்கி, அதே நேரத்தில் மக்கள் போக்குவரத்தை அதிகப்படுத்த வேண்டும் பெனலோசா கூறினார், அதையே சுட்டிக்காட்டி நீங்களும் கூறியிருந்தீர்கள். அதை கொஞ்சம் விரிவாக விளக்குவீர்களா?தேவசகாயம்: ஹென்ரிக் பெனலோசாவிற்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்ததே நாங்கள்தான். அப்போது அவர் கூறியது இதுதான்.இதில் முக்கியமாக கருத்து என்னவென்றால், Transportation என்ற வார்த்தையையே முதலில் நாம் ஒதுக்கி வைக்க வேண்டும். டிரான்ஸ்போர்ட்டேஷன் என்று சொல்லும் போது ஒரு எஞ்ஜினியரிங் கான்சப்டைக் கொண்டு வருகிறது. Mobility, Movement அது Human aspectஐ குறிக்கிறது. ஆரம்பத்திலேயே ஒரு குழந்தை எப்படி இயங்கத் துவங்குகிறது? முதலில் தவழ்ந்து, பிறகுதானே நடக்கின்றது? நடையிலிருந்து சைக்கிளில் போகிறீர்கள். அப்புறம் டூவீலரில் போகிறீர்கள். அதுக்கப்புறம் கார், பேருந்து, ரயில். இவையெல்லாம் அதற்குப்பிறகுதானே வருகிறது? ஆகையால், மொபிலிட்டி எப்படி என்று பார்க்க வேண்டும். பேசிக் மொபிலிட்டி என்பது காலால் நடப்பது. சென்னையில் 36 விழுக்காட்டு மக்கள் வேலைக்கும், பல இடங்களுக்கும் நடந்துதான் போகிறார்கள். சைக்கிளில் போகிறவர்கள் ஒரு 15, 16 விழுக்காட்டினர். பேருந்தில் போகிறவர்கள் 23 விழுக்காடு. மற்றபடி, காரில் போகிறவர்கள் நான்கே விழுக்காட்டினர்தான். ஸ்கூட்டர் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்களில் போகிறவர்கள் 19 விழுக்காட்டினர். ஆக 77 விழுக்காட்டினர் இதுபோன்ற வாகனங்களில் போகிறவர்கள்தான். இப்போது அவர்களுக்குள்ள வசதிகள் பார்த்தீர்களானால், சாலையைப் பொறுத்தமட்டில், Transport என்ற வார்த்தையை பயன்படுத்துவதால், சாலை என்பது வாகனங்களை பயன்படுத்துவதற்கு, கார், பேருந்து, ஸ்கூட்டர் போவதற்குதான் என்று ஆகிவிட்டது. சைக்கிள் போவதற்கோ, நடப்பதற்கோ இல்லை என்று ஆகிவிட்டது. இரண்டாவது, இந்த சாலை என்ன ஆகியிருக்கிறது என்றால், சாலை மொத்தமாக ஆக்கிரமிக்கப்பட்டு (Encroachment) சென்னையில் 50 விழுக்காடு சாலை கூட உபயோகப்படுத்த முடியாத நிலை உள்ளது.
பல காரணங்களால், சாலையிலேயே வியாபாரம் நடக்கிறது. கட்டுமானத்திற்கு சாலை ஆக்கிரமிக்கப்படுகிறது. வாகன நிறுத்தம் மிக மோசமாகப் பாதிக்கிறது. அதற்கிடையே, எருமை மாடுகள், பசு மாடுகள் நடக்கிறது. அப்புறம் டாஸ்மாக் கடையில் குடித்துவிட்டு நடக்கிறார்கள். இப்படி சாலையில் போவது என்பது பயங்கரமான அனுபவமாக உள்ளது.
இதுபோக, காவல்துறை இதைவிட மோசமான காரியம் ஒன்றைச் செய்கிறார்கள். கொஞ்சம் சாலை விரிவாக இருந்தால், அதில் ஒரு பேரிகேட் வைத்து விடுகிறார்கள். வேகத்தை குறைப்பதற்கு என்று காரணம் சொல்கிறார்கள், ஏற்கனவே வேகம் இல்லை. ஸ்பீட் பிரேக்கர்னு சொல்லி, எதையே போட்டு அசிங்கப்படுத்தி வைத்து, ஒரு கல்லையும் தூக்கி வைச்சு, சிமெண்ட்டையும் போட்டு கண்ட கண்ட இடத்திலெல்லாம் தடையை போட்டுவிடுகிறார்கள். இதெல்லாம் காவல்துறை செய்கின்ற அநியாயம். உலகத்தில் எந்த நாட்டிலேயும் நடக்காத அநியாயம்.
மூன்றாவது, டிராஃபிக் டைவர்ஷன். ஒன் வே டிராஃபிக், டூ வே டிராஃபிக், த்ரி வே டிராஃபிக் என்று மாற்றியமைத்து விடுகிறார்கள். இதில் அறிவியல் பூர்வமான அணுகுமுறை கிடையாது, முன்னோட்டம் கிடையாது, ஒரு சோதனை என்று ஏதும் செய்வதில்லை. சென்னையைப் பொறுத்தமட்டில், டிராஃபிக் மேனேஜ்மெண்ட் என்ற சொல்லக்கூடியே ஒரு அணுகுமுறையே இல்லை. இந்தக் காரணத்தனால, நமக்கு நடக்கவும் முடியாது, சைக்கிளிலும் போக முடியாது, டூ வீலரிலும் போக முடியாது. கொஞ்சம் பாதுகாப்பாக போகலாம்னு கார் வாங்குகிறார்கள். ஆனால், காருக்கும் போவதற்கு இடமில்லை.
இப்ப டூ வீலர்ல போறத பார்த்திருப்பீர்கள். ஒருவர் லெஃப்ட்ல இருப்பார், ஒருத்தர் சென்டர்ல இருப்பார், ஒருத்தர் ரைட்ல இருப்பார், ஒருத்தர் முன்னால இருப்பார், ஒருத்தர் பின்னால இருப்பார். எங்க இருப்பார்களென்று சொல்ல முடியாது. டூ வீலர்சும், த்ரீ வீலர்சும் எங்கிருந்து வரும், எங்கிருந்து போகும் என்று சொல்ல முடியாது. ஆனால், காரையோ அல்லது பேருந்தையோ அப்படி செலுத்த முடியாது. இது ஒரு பெரும் அவஸ்தை.
இப்போது மற்றொன்றும் நடக்கிறது. வெளிநாடுகளில் இருந்து பல நூற்றுக் கோடி ரூபாய் முதலீட்டுடன் வருகிறார்கள். அந்த நிறுவனங்கள் அனைத்திலும் நல்ல கார்கள் இருக்கிறது. அந்தக் கார்கள் போவதற்கு சாலைகள் போட்டுக்கொடு, மேம்பாலங்கள் அமைத்துக் கொடு என்று கேட்கிறார்கள். அமைத்துக் கொடுத்தாகிவிட்டது. பிறகு பல அடுக்கு சாலைகள், மல்டி லேயர் ரோட்ஸ். அதில் கார்கள்தான் போக முடியும். பேருந்தும் போகாது, டூ வீலர்சும் போகாது. 3, 4 விழுக்காடு கார்களுக்காக இவ்வளவும் செய்கிறார்கள். 96 விழுக்காட்டினருக்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள்? இந்தக் கேள்வியைத்தான் ஹென்ரி பெனலோசா கேட்டார்.
அவர் நல்ல ஒரு தகவலைக் கொடுத்தார். பல நாடுகளில் இந்த மேம்பாலங்கள், எக்ஸ்பிரஸ் எலிவேட்டர்ஸ் என்று இருந்தையெல்லாம் இடிக்கிறார்கள். ஜப்பானில் 9 பில்லியன் டாலர்கள் (சுமார் 45,000 கோடி) செலவு செய்து சாலை மேம்பாலங்களை இடிக்கிறார்கள். இங்க அதை கட்டுவதற்குத்தான் பிரியப்படுகிறார்கள். எப்போதும் அதைப்பற்றியே பேசுகிறார்கள். அதனையே மேம்பாடு என்று கூறுகிறார்கள்!
சென்னை மாநகரின் செகண்ட் மாஸ்டர் பிளானில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கு. டிரான்ஸ்போர்ட்டேஷன்ல, Non Motorized Transport will be given Priority. அதாவது, மோட்டாரற்ற போக்குவரத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும். Non Motorized Transport என்றால் நடப்பதும் சைக்கிளும்தான் (walking and cycling). இந்த இரண்டுக்கும் ஒன்றுமே செய்யவில்லை. புத்தகத்தில் மட்டும் எழுதி வைத்துள்ளார்கள்.
துணை முதல்வர் பேசினாலும் அதுதான், மேயர் பேசினாலும் அதுதான், யார் பேசினாலும் அதுதான். மேம்பாலங்கள் கட்டிவிட்டோம், எக்ஸ்பிரஸ் ஹைவே போட்டுவிட்டோம் என்று ஏதோ பெரிதாக சாதித்துவிட்டது போல பேசுகிறார்கள். இதனால, போக்குவரத்து நெரிசலையும் சமாளிக்க முடியாது. மக்களுடைய இயக்கத்தையும் ஒழுங்க செய்ய முடியாது.
இரண்டாவது, மாஸ் டிரான்ஸ்போர்ட்... (தொடரும்)