இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று கோரி இன்றுடன் 9வது நாளாக உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டுவரும் தமிழின அழிப்பிற்கு எதிரான பெண்கள் அமைப்பு, சோனியா காந்தி போரை நிறுத்துவது குறித்து உத்தரவாதம் வழங்கினால் மட்டுமே தங்கள் போராட்டம் முடிவிற்கு வரும் என்று கூறியுள்ளனர்.சென்னை எழும்பூரில் உள்ள மறுமலர்ச்சி தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஒரு பந்தலிட்டு அங்கு தங்கள் போராட்டத்தை தொடர்ந்துக் கொண்டிருக்கும் பெண்களின் உடல் நிலை மோசமடைந்து வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். 3 பெண்களின் நிலை மிக மோசமாக உள்ளதென தெரிகிறது.இப்படிப்பட்ட சூழலில் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பேராசிரியர் சரசுவதியை தமிழ்.வெப்துனியா.காம் பேட்டி கண்டது.
உண்ணாவிரதப் போராட்டத்தை 9வது நாளாக தொடர்கிறீர்கள். மிகப்பெரிய போராட்டம் இது. சோனியா காந்தியே போரை நிறுத்து என்ற முழக்கத்துடன் துவக்கப்பட்டுள்ள இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு எந்த அளவிற்கு அரசு செவி சாய்த்திருக்கிறது?
பேராசிரியர் சரசுவதி: சோனியா காந்தி அவர்களே ஈழத்தில் நடக்கும் போரை உடனடியாக நிறுத்துங்கள் என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழ் இன அழிப்புக்கு எதிரான பெண்கள் அமைப்பின் சார்பாக சாகும்வரை உண்ணாநிலை என்ற அறப்போராட்டத்தை 20 பெண்கள் மேற்கொண்டுள்ளார்கள்.
அவர்களுடன் இணைந்து 10 பெண்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.
எங்களுடைய போராட்டம் கடந்த 13ஆம் தேதி, முதன் முறையாக ஈழத் தமிழர்களுக்காக தனது இன்னுயிரை தந்த முத்துக்குமார் இறந்த 75வது நாளில், அவரது பூத உடல் வைக்கப்பட்டிருந்த அந்தப் இடத்தில்தான் துவக்கினோம்.
ஆனால் காவல்துறை எங்களுக்கு அனுமதி கொடுக்க மறுத்ததால் நாங்கள் எங்கள் உண்ணாவிரதத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.
வேறு யாருமே எங்களுக்கு இடம் கொடுக்க முன்வராத காரணத்தினால், வேறு வழியின்றி நாங்கள் இங்கே (ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில்) வந்து உட்கார்ந்திருக்கின்றோம். இது எந்த ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்ததோ, எங்கள் அமைப்பில் இருக்கும் பெண்கள் எந்த அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களோ இல்லை.
ஈழத்தில் நடக்கும் கொடுமைகளைக் கண்டு குமுறி எழுந்த பெண்கள் உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும், அங்கு நிறந்தரமாக போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதற்காக இங்கு உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களில் சிலரது உடல்நிலை மோசமாகப் போனாலும் கூட அவர்கள் உண்ணாவிரதத்தைக் கைவிடுவதற்கோ, மருத்துவமனைக்குச் செல்வதற்கோ மறுக்கிறார்கள். அவர்கள் தங்களது கோரிக்கை நிறைவேற வேண்டும். அப்போது நாங்கள் இங்கிருந்து போகிறோம். அவ்வாறு இல்லையென்றால், இங்கிருந்து எங்களது உடல்தான் வெளியேற வேண்டும் என்று இங்கே உண்ணாவிரதத்தை தொடர்கின்றனர்.
தொடர்ந்து இத்தனை நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டும், யாரை நோக்கி நாங்கள் கோரிக்கை வைத்திருக்கிறோமோ, அவரது (காங்கிரஸ்) கட்சியின் தமிழக பிரதிநிதிகள் கூட வந்து எங்களைப் பார்க்கவில்லை. நொண்டிச் சாக்கு சொல்கிறார்கள். அதாவது நீங்கள் வேறொரு கட்சியின் அலுவலகத்தில் சென்று அமர்ந்திருக்கின்றீர்கள், அங்கு எப்படி நாங்கள் வர முடியும் என்று கூறுகிறார்கள்.
நாங்கள் சொன்னோம், நீங்கள் சத்தியமூர்த்திபவனில் இடம் கொடுங்கள், நாங்கள் அங்கே வந்து உட்கார்ந்து கொள்கிறோம், அறிவாலயத்தில் இடம் கொடுங்கள் அங்கே வந்து உண்ணாவிரதத்தைத் தொடர்கிறோம், எங்களுக்கு யாரும் இடம் கொடுக்க முன்வராத காரணத்தினால், கடைசி வாய்ப்பாக இங்கு வந்து இருக்கிறோம். எங்களுக்கும் அந்த கட்சிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறோம்.நேற்றுத்தான் சுதர்சனம் (தமிழக சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர்) அவர்கள் எங்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். உண்ணாவிரதத்தைக் கைவிட்டு விடுங்கள். நாங்கள் சோனியா காந்தியிடம் பேசி உங்களுக்கு நல்ல முடிவைக் கொடுக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.நாங்கள் சொன்னோம், நாங்கள் இன்றோடு 8வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளோம். நீங்கள் சோனியா காந்தியிடம் பேசி ஒரு முடிவைப் பெறுவதற்கு எத்தனை நாட்கள் ஆகும் என்று கேட்டோம், அதற்கு மூன்று நாட்கள் ஆகும் என்று சொன்னார். பரவாயில்லை, நீங்கள் சோனியா காந்தியிடம் சொல்லி ஒரு உத்திரவாதத்தை வாங்குங்கள். அதுவரை நாங்கள் காத்திருக்கிறோம் என்று கூறினோம்.எனவே காங்கிரஸ் கட்சி, அதுவும் இது தேர்தல் காலம், தாங்கள் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவார்கள் என்று நம்புகிறோம், சோனியா காந்தியிடமிருந்து அந்த உத்திரவாதத்தை பெறாமல் நாங்கள் இந்த உண்ணாவிரதத்தை நிறுத்துவதாக இல்லை. எங்கள் பெண்களின் உடல் பலவீனமாக இருந்தாலும் கூட உள்ளம் மிக பலமானதாக இருப்பதால் இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடரும்.20
பேருடைய உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, சுதர்சனம் அவர்கள் மேலிடத்தில் பேசி ஒரு முடிவைத் தரும் இந்த 3 நாட்களுக்கு உண்ணாவிரதத்தைக் கைவிட்டுவிட்டு, உங்களுக்கு சாதகமான பதில் வராத பட்சத்தில் மீண்டும் உண்ணாவிரதத்தைத் தொடர்வது சரியாக இருக்குமே?பேராசிரியர் சரசுவதி: இது தனிப்பட்ட ஒருவர் எடுக்கும் முடிவல்ல. இந்த போராட்டத்தை நடத்துவது 40 அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள்தான். எனவே இந்த 40 அமைப்புகளையும் சேர்த்து ஒரு புதிய பெயர் சூட்ட உள்ளோம். ஈழத் தமிழ் இன அழிப்புக்கு எதிரான பெண்கள் அமைப்பு என்பதாகும். அவர்கள் எடுக்கும் முடிவை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை.
நேற்று கனிமொழி (மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர்) வந்திருந்தார்கள். கனிமொழி அவர்களும், நோயுற்ற பெண்களிடம், உடல் கெட்டுவிடும், ஏன் இப்படி உண்ணாவிரதத்தை மேற்கொள்கின்றீர்கள், தயவு செய்து உண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
ஆனாலும் கூட, அந்த பெண் கூறினாள், தினம் ஆயிரக்கணக்கான பெண்கள் அங்கே செத்துக் கொண்டிருக்கும் போது, இங்கே ஒன்றிருவர் சாவதில் ஒன்றுமே இல்லை. அவர்களைக் காப்பாற்றுங்கள். நாங்கள் எங்களைக் காப்பாற்றிக் கொள்வோம் என்று உறுதியாகச் சொன்னார்கள்.
சோனியா காந்தியே போரை நிறுத்து என்று மட்டும் சொல்வதற்கு காரணம் என்ன? பிரதமர், காங்கிரஸ் கட்சி, இங்குள்ள திமுக அரசுக்கு ஏன் கோரிக்கை வைக்கவில்லை?
பேராசிரியர் சரசுவதி: திமுக தலைவருக்கு போரை நிறுத்த வேண்டும் என்று 100 விழுக்காடு எண்ணம் உள்ளது. அதனால்தான் இரண்டு முறை சட்டசபையைக் கூட்டி ஒருமித்த கருத்தோடு போரை நிறுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார், கொட்டும் மழையில் மனித சங்கிலிப் போராட்டத்தை நடத்தினார், ஊர்வலம் சென்றார்கள், உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தப்பட்டது.
ஆனால் கருணாநிதியின் எந்த கோரிக்கைக்கும் சோனியா காந்தி செவிசாய்க்கவில்லை.
மத்திய அரசை வழிநடத்திச் செல்பவர் சோனியா காந்தி என்பதாலும், அவரது சொல்படிதான் மத்திய அரசு செல்கிறது என்பதாலும் வேறு யாருக்கும் இந்த கோரிக்கையை வைப்பது அர்த்தமாகாது என்ற காரணத்தினால் சோனியா காந்திக்கு இந்த கோரிக்கையை வைத்துள்ளார்.அவர் மட்டுமே முடிவெடுக்கும் இடத்தில் இருக்கிறார். அவர் நினைத்தால் நிச்சயம் முடியும் என்ற காரணத்தினால் அவருக்கு இந்த கோரிக்கையை வைத்திருக்கிறோம்.உங்களுக்கு அப்படிப்பட்ட நம்பிக்கை இருக்கும் என்றால் 9 நாட்களை எட்டிவிட்ட இந்த உண்ணாவிரதப் போராட்டம், இத்தனை நாள் நீடிக்க வேண்டிய அவசியமில்லையே?பேராசிரியர் சரசுவதி: நீங்கள் கேட்டது சரியான கேள்வி, நேற்றுத்தான் சுதர்சனம் அவர்கள் எங்களை பேச்சுவார்த்தை நடத்த அழைத்தார்கள். எங்களது தூதுக்குழு சென்றது. அப்பொழுது அவர் சொன்ன பதில் என்னவென்றால், சோனியா காந்தி அவர்கள் தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக இருப்பதால் அவர்களிடம் நாங்கள் பேச வாய்ப்பில்லை. அவரிடம் இந்த விஷயத்தை எடுத்துச் சென்றுவிட்டு அதற்கான பதிலை தெரிவிக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.
எங்களது பதில் என்னவென்றால், சோனியா காந்தி இங்கு நேரில் வர வேண்டும் என்று கூட சொல்லவில்லை. நாங்கள் கேட்பது இரண்டு விஷயம், சோனியா காந்தியுடன் எங்களுக்கு ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது நான் போரை நிறுத்த முயற்சி செய்கிறேன் என்று உத்திரவாதம் வாங்கித் தாருங்கள். இந்த உத்திரவாதத்தை தமிழக காங்கிரஸ் சார்பில் தங்கபாலுவோ அல்லது ப சிதம்பரம் போன்றவர்களோ கொண்டு வந்து கொடுத்தாலும் பரவாயில்லை.
அவ்வாறு இல்லாமல், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் கனிமொழி அவர்கள் அந்த உத்திரவாதத்தைப் பெற்று வந்தாலும் அதனை நாங்கள் ஏற்றுக் கொண்டு உண்ணாவிரதப் போராட்டத்தை முடிப்பதற்கு தயாராக உள்ளோம்.
எங்கள் உண்ணாவிரதம் பற்றி எல்லா ஊடகங்களிலும் வந்த பிறகும் கூட, தமிழக காங்கிரஸ் கட்சி, எங்களை அழைத்துப் பேச 8 நாள் ஆகியுள்ளது. இது வருத்தத்திற்குரிய செய்தி. ஆக பெண்களின் போராட்டத்தை அவர்கள் எப்படி குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்று வருத்தமாக உள்ளது.
எனினும் அழைத்துப் பேசியதற்கு நன்றி, உடனடியாக சோனியா காந்தியிடம் இது பற்றி பேசி ஒரு நல்ல முடிவை பெற்றுத் தருவார்கள் என்று நம்புகிறோம்.
இலங்கையில் நேற்று மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சற்றேறக்குறைய 1,600 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 3,000க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றுள்ளனர், ஒட்டுமொத்தமாக 5,000 தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அங்கு போர் நிறுத்தம் ஏற்பட்டு அந்த மக்கள் அமைதியாக வாழ வேண்டும் என்று போராடும் உங்களது மனநிலை எப்படி உள்ளது?
பேராசிரியர் சரசுவதி: மிகக் கொடூரமான தாக்குதல், இங்கு உண்ணாவிரதம் இருக்கும் பெண்கள், அந்த செய்தியை இணையதளத்திலும், தொலைக்காட்சியிலும் பார்த்துவிட்டு கதறி அழுதார்கள். நாம் இங்கு போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம், நம்மிடம் வந்து 20 பேர் செத்தால் என்ன ஆகிவிடும் என்று நம்மை உண்ணாவிரதத்தை நிறுத்திவிடச் சொல்கிறார்கள். அங்கு கொத்து கொத்தாக செத்துக் கொண்டிருக்கிறார்கள். இலங்கை ராணுவம், பிஞ்சு பிள்ளைகளை முன்னிறுத்தி அவர்களது பின்னால் முன்னநகர்த்திக் கொண்டிருக்கிறது. கேடயமாகப் பயன்படுத்தித்தான் சிறிலங்க ராணுவம் இப்படிப்பட்ட தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இதைக் கேட்டதும் நெஞ்சு வெடித்தது, இந்த போராட்டத்தின் மூலமாக நிச்சயம் போர் நிறுத்தம் நடைபெறும் என்று நம்புகிறோம். இது ஒன்றும் காலம் கடந்து விடவில்லை, இப்போது அவர்கள் போர் நிறுத்தத்தை மேற்கொண்டால் கூட எஞ்சியுள்ள தமிழர்களாவது அங்கே உயிர் பிழைக்க முடியும் என்பதால்தான் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நாங்கள் தொடர்ந்து வருகிறோம்.
நன்றி பேராசிரியர சரஸ்வதி அவர்களே, உங்களுடன் இருக்கும் இந்த 20 பெண்களும் சேர்ந்து நடத்தும் உண்ணாவிரதப் போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும் என்று நாங்கள் வாழ்த்துகிறோம்.