மரபணு மாற்றுத் தொழில்நுட்ப விதைகளால் மலட்டுத்தன்மை ஏற்படும் என்று இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்.
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நம்மாழ்வார் செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்போது உலகிலுள்ள முக்கிய பிரச்னை, புவி வெப்பமடைதலும், உணவு பற்றாக்குறையும்தான்.
விவசாய நிலங்கள் மாற்றுத் தொழில்களுக்கு பயன்படுத்தப்படுவது, உணவுப் பொருள்களில் 48 விழுக்காடு கால்நடைகளுக்கு உணவாக்கப்படுவது, பயோ டீசல் தயாரிப்பு ஆகியவையே உணவுப் பற்றாக்குறை ஏற்பட காரணமாக இருக்கின்றன.
இந்நிலையில், அமெரிக்கா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த இரு நிறுவனங்கள் மரபணு மாற்று விதைகளை நம்நாட்டில் திணிக்க முயற்சி செய்து வருகின்றன.
இதற்கு மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்துத்தற்கான அங்கீகாரக் குழு அனுமதி வழங்கத் திட்டமிட்டுள்ளது. இந்திய வேளாண்மையில் பூச்சிகளை ஒழிப்பதற்காகவே மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்தின் தேவை நியாயப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த தொழில்நுட்பத்தால் மனிதர்களுக்கு புற்றுநோய், மலட்டுத்தன்மை, ஒவ்வாமை போன்ற நோய்கள் ஏற்படும். கூடுதல் லாபம் என்ற பெயரில் பல்லுயிர்த்தன்மை அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதை தொடக்கத்திலேயே தடுக்க வேண்டும். இந்தியாவில் எதை விவசாயம் செய்ய வேண்டும் என்பதை தனியார் நிறுவனங்கள் முடிவெடுக்கக் கூடாது. இது நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கும்.
மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்துக்கு எதிராகக் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் மற்றொரு மனுதாரராக மரபணு மாற்றத்துக்கு எதிரான தென்னகம் (தமிழ்நாடு பிரிவு) அமைப்பை இணைக்க முடிவு செய்துள்ளோம்.
மரபணு மாற்றுத் தொழில்நுட்ப விதைகளால் எவ்வளவு விளைச்சல் கிடைக்கும், அவை பாதுகாப்பானவையா என்பது பற்றி உரிய விளக்கம் இல்லை.
இந்த விதைகளுக்கு அனுமதி அளிப்பதற்கு முன் பாதுகாப்பான உணவுதானா என்பதைச் சோதனை செய்து முடிவை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று நம்மாழ்வார் கூறினார்.
முன்னதாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், விவசாயிகள், நுகர்வோர்கள், மருத்துவர்கள், கல்வியாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தொண்டு நிறுவன நிர்வாகிகள் ஆகியோர் மரபணு மாற்றுத் தொழில்நுட்பம் குறித்து தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
இதேபோல, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தியை பயிரிட்டு பாதிக்கப்பட்ட தென் ஆப்பிரிக்க விவசாயிகள் 25 பேர், அவர்களது பாதிப்புகள் குறித்து விளக்கம் அளித்தனர்.