வேக ஈனுலை அணு மின் தொழில் நுட்ப ஆய்விலும் நடைமுறையிலும் முன்னனியில் இருந்துவரும் நமது நாடு, 2020ஆம் ஆண்டு உலகின் தலைமை இடத்தை வகிக்கும் நாடாக உயரும் என்று அணு விஞ்ஞானி பல்தேவ் ராஜ் கூறியுள்ளார்.
மும்பையில் இந்திய அணு சக்தி சமூகம் ஏற்பாடு செய்த ‘வேக ஈனுலை தொழில் நுட்பத்தில் இந்தியா’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றிய இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் (கல்பாக்கம்) இயக்குனரும், விஞ்ஞானியுமான முனைவர் பல்தேவ் ராஜ், தற்பொழுது கல்பாக்கத்தில் நிறுவப்பட்டுவரும் 500 மெகா வாட் மின் உற்பத்தித் திறம் கொண்ட வேக ஈனுலை வெற்றிகரமாக செயல்படத் துவங்கியப் பிறகு, அடுத்த 10 ஆண்டுகளில் மேலும் 4x500 மெகா வாட் வேக ஈனுலைகள் செயல்படத் துவங்கியதும் இத்தொழில் நுட்பத்தில் நமது நாடு உலகின் தலைமையிடத்தில் இருக்கும் என்றும் கூறினார்.
பிரான்ஸ், அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் மீண்டும் இத்தொழில் நுட்பத்தை கையாளத் துவங்கியுள்ளதென்றும் கூறிய பல்தேவ் ராஜ், கல்பாக்கத்தில் நிறுவப்படும் வேக ஈனுலை 2010ஆம் ஆண்டு செயல்படத்துவங்கும் என்றும், அது 40 ஆண்டுகளுக்கு செயல்படும் என்றும் கூறினார்.
அணு மின் சக்தித் தொழில் நுட்பத்தில் வேக ஈனுலை தொழில்நுட்பத்தின் வாயிலாக மட்டுமே அணு எரிபொருள் மிக பாதுகாப்பான முழுமையான மறு சுழற்சியின் வாயிலாக ஆபத்தின்றி பயன்படுத்தி முடிக்கப்படுகிறது என்றும், அதன் மூலம் அணு எரிபொருள் சுழற்சி முழுமை பெருகிறது என்றும் கூறினார்.
அணு மின் தொழில் நுட்பத்தில் முதல் கட்டமான கடின நீர் உலைகளில் பயன்படுத்தப்பட்ட யுரேனியம் எரிபொருளில் இருந்து உருவாகும் புளூடோனியத்தை, யுரேனியத்துடன் கலந்து அதனை வேக ஈனுலையில் (Fast breeder Reactor) பயன்படுத்தும்போது, எந்த அளவிற்கு அணு எரிபொருள் ஈனுலையில் பயன்படுத்தப்படுகிறதோ அந்த அளவிற்கு ஈடாக மேலும் அணு எரிபொருள் கிடைக்கும் என்பதால் இது அணு எரிபொருளை மறு சுழற்சி செய்து பயன்படுத்துவதற்கு உதவுவது மட்டுமின்றி, கதிர் வீச்சு ஆபத்தற்ற இறுதிக் கழிவை அளிக்கிறது. எனவே இதனை எரிபொருள் சுழற்சியின் முழுமை என்று அழைக்கப்படுகிறது.
கல்பாக்கத்தில் நிறுவப்பட்டுவரும் 500 மெகா வாட் வேக ஈனுலைக்கான கட்டமைப்புப் பணிகள் முடிந்துவிட்டதெனவும், அணு உலையை நிறுவுவதற்கான பணிகள் துவங்கிவிட்டதாகவும் கூறிய பல்தேவ் ராஜ், வேக ஈனுலைத் தொழில் நுட்பத்தின் மூலம் மட்டும் 2052ஆம் ஆண்டில் 275 கிகா வாட் (ஒரு கிகா வாட் = 1000 மெகா வாட்) மின்சாரம் தயாரிக்கப்படும் என்று கூறினார்.
இந்தியா கடைபிடித்துவரும் 3 கட்ட அணு ஆய்வுத் திட்டத்தில் வேக ஈனுலை இரண்டாம் கட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.