கரியமில வாயுவை அகற்றுகிறது சூறவாளிக் காற்று!
வாஷிங்டன்: புவி வெப்பமடையும் நடவடிக்கையால் மிகப்பெரிய சூறாவளிக் காற்றும் புயல்களும் உருவாகும் என்று கருதப்படும் அதே வேளையில் இத்தகைய சூறாவளிகளும் புயல்களும் வளிமண்டலத்தில் உள்ள கரியமில வாயுவை அகற்றுகிறது என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர்.இது குறித்து டிஸ்கவரி நியூஸ் அறிக்கையின் படி, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் ராபர்ட் ஹில்டன் என்ற பேராசிரியர் தலைமையிலான குழு ஒன்று இத்தகைய ஆய்வை மேற்கொண்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மனித நடவடிக்கைகளால் வெளியாகும் கிரீன் ஹவுஸ் வாயுக்களின் அளவு 7.2 பில்லியன் டன்களாகும். இதனால் வளி மண்டலம், கடல் நீர் ஆகியவை கடுமையாக வெப்பமடைந்து வருகிறது. கடல் நீரின் மேல்பரப்பு வெப்பமடைவதால் மிகப்பெரிய சூறாவளிகள் உருவாகும் என்று ஏற்கனவே விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தனர்.இந்த நிலையில் அழிவிற்கு காரணமாகும் சூறாவளிகளும், புயல் காற்றுகளும் புவி வெப்பமடைதல் நடவடிக்கையால் வளிமண்டலத்தில் சேரும் கரியமில வாயுவை அகற்றுகிறது என்று ஹில்டன் தலைமை ஆய்வுக் குழு கூறுகிறது.தங்களுடைய இந்த முடிவுக்கு சாட்சியாக இந்த ஆய்வுக் குழு தைவானில் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரிய சூறாவளிக்காற்றுகளை உதாரணம் காட்டுகின்றனர். அதாவது இந்த சூறாவளிக்கற்றுகளால் உருவான பலத்த மழை ஆயிரம் டன் கணக்கில் கரியமில வாயுவை அகற்றியுள்ளதாக கூறுகின்றனர்.
அதாவது இந்த கரியமில வாயு நிறைந்த தாவரங்கள் மற்றும் மண் ஆகியவற்றை மழை நீர் மலைகளின் வழியாக லிவூ நதியில் கொண்டு சென்று கடலுக்கு அடியில் படிவுகளாகச் செய்துள்ளது என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள்.
2004-ஆம் ஆண்டு தைவானில் வீசிய அந்த மின்டுலே என்ற சூறாவளி சுமார் 5,000 டன்கள் அளவில் கார்பனை அடித்துச்சென்றதாக அவர் பேராசிரியர் ஹில்டன் கூறுகிறார்.
இது போன்று பசிபிக் கடலினடியில் மட்டும் ஆண்டொன்றிற்கு 50 முதல் 90 மில்லியன் டன்கள் கார்பன் படிவுகள் சேர்வதாக அவர் கூறுகிறார்.