Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஓசோன் படுகை ஓட்டை பெரிதானது: உலக வானிலை மையம்!

ஓசோன் படுகை ஓட்டை பெரிதானது: உலக வானிலை மையம்!
, செவ்வாய், 16 செப்டம்பர் 2008 (18:37 IST)
அண்டார்டிக் பகுதி ஒசோன் படுகையில் உள்ள ஓட்டை கடந்த 2007இல் இருந்ததை விட இந்த ஆண்டு பெரிதாகியுள்ளதாக உலக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் 2006இல் இருந்ததை விட ஓசோன் ஓட்டையின் அளவு குறைவாக உள்ளதாக அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து உலக வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 13ஆம் தேதி நிலவரப்படி அண்டார்டிக் பகுதியில் உள்ள ஓசோன் படுகையில் 27 மில்லியன் சதுர கி.மீ. அளவு ஓட்டை உள்ளது. இது கடந்த 2007ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 25 மில்லியன் சதுர கி.மீ. ஆக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஓசோன் படுகையில் உள்ள ஓட்டை இந்த ஆண்டு தொடர்ந்து பெரிதாகி வருவதால் அதிகபட்சமாக எத்தனை மில்லியன் சதுர கி.மீ. எட்டும் எனக் கணிப்பது தற்போதைய சூழலில் இயலாதது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஓசோன் படுகையில் ஓட்டை விழுந்தது கடந்த 1980இல் கண்டறியப்பட்டது. ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் துவங்கத்தில் ஓசோன் படுகையில் விழும் ஓட்டை, அக்டோபர் துவக்கத்தில் அதிகபட்ச அளவை எட்டும். பின்னர் அடுத்தடுத்த நாட்களில் மீண்டும் சுருங்கத் துவங்கும் ஓசோன் ஓட்டை டிசம்பர் மத்தியில் சகஜ நிலையை அடையும்.

கடந்த 1987ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி ஓசோன் படுகையை நாசம் செய்யும் ரசாயனங்களுக்கு எதிரான மான்ட்ரீயல் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. இதையடுத்து அந்த தினமே - செப். 16, 1995 முதல் சர்வதேச ஓசோன் பாதுகாப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

துவக்கத்தில், மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்ட நாடுகள் ஓசோன் படுகையில் நாசம் விளைவிக்கும் ரசாயனங்களான குளோரோ புளோரோ கார்பன், ஹேலோன், கார்பன் டெட்ரா குளோரைடு ஆகியவற்றை படிப்படியாக குறைத்து முற்றிலும் இதன் வெளிப்பாட்டை ஒழிக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றன.

ஆனால் இதே துறையில் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வுகளில் மெதில் குளோரோஃபார்ம், ஹைட்ரோ குளோரோ புளூரோ கார்பன், மெதில் ப்ரோமைட் ஆகிய ரசாயனங்களும் ஆபத்து மிகுந்தவை பட்டியலில் சேர்க்கப்பட்டு, இதன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தவும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கிடையில், ஓசோன் படுகையை பாதுகாக்கும் நடவடிக்கைகளை தீவிரமாக நடைமுறைப்படுத்தினால், வரும் 2075ஆம் ஆண்டில் முற்றிலும் சீரடைந்த ஓசோன் படுகையை (அதாவது 1980ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்ததைப் போன்ற சூழலை) ஏற்படுத்த முடியும் என உலக வானிலை ஆய்வு மைய மூத்த விஞ்ஞானி கெய்ர் பிராத்தென் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil