புது டெல்லி: வானிலை மாற்றத்திற்கு காரணமான கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் இந்திய அரசின் செயல் திட்டங்களுக்கு பாராட்டு கிடைத்துள்ளது.
ஐ.நா.வின் உலக விலங்கின பாதுகாப்பு நிதியம் (WWF), சர்வதேச நிதி நிறுவனமான அலையன்ஸ் ஆகியவற்றால் நியமிக்கப்பட்ட ஈகோஃபிஸ் என்ற ஆலோசனை அமைப்பு சமர்பித்த அறிக்கை, பணக்கார நாடுகளான ஜி- 8 நாடுகள் நச்சு வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதில் மிகவும் பின் தங்கியுள்ளதாக இன்று டோக்கியோவில் துவங்கிய ஜி- 8 நாடுகள் உச்சி மாநாட்டில் அறிக்கை வாசித்தது.
புவி வெப்ப நிலையை 2 டிகிரி செல்சியஸ் உயர்விற்குக் கீழ் தக்க வைக்கும் நடவடிக்கைகளில் முன்னணி தொழிற்துறை நாடுகள் பின்தங்கியுள்ளது என்று டபிள்யூ. டபிள்யூ. எஃப்.- இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி ரவி சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள பருவ நிலை மாற்றத்தின் மீதான தேசிய செயல் திட்டத்தை பாராட்டிய இந்த அறிக்கை, மற்ற நாடுகளையும் இதனை பின்பற்ற வலியுறுத்தியுள்ளது.
1990ஆம் ஆண்டு முதலான கடந்த கால நச்சு வாயு வெளியேற்றம், கியோட்டோ உடன்படிக்கை இலக்கு ஆகியவற்றை ஒப்பிட்டு ஜி- 8 நாடுகளின் நடவடிக்கை பின் தங்கியுள்ளதாக இந்த அறிக்கை கூறியுள்ளது.
மேலும் 3 முக்கிய கொள்கைகளான எரிபொருள் ஆற்றல் திறன், மறு ஆக்கம் செய்யக்கூடிய எரிபொருள் ஆற்றல், கார்பன் சந்தை மேம்பாடு ஆகிய துறைகளில் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் இந்த ஆய்வு கணக்கிலெடுத்துக் கொண்டுள்ளது.
இந்த அறிக்கை, ஃபிரான்ஸ், ஜெர்மனி நாடுகளுக்கு சற்று மேலே பிரிட்டனை வைத்துள்ளது. பிரிட்டன் கியோட்டோ உடன்படிக்கை இலக்கை எட்டவுள்ளது. மேலும், பருவ நிலை மாற்ற மசோதா போன்ற சில நடவடிக்கைகளையும் அறிமுகம் செய்துள்ளது. தனது கார்பன் சந்தை அணுகுமுறையை பிரிட்டன் வலியுறுத்திவரும் அதே வேளையில் மறு ஆக்கம் செய்யக்கூடிய எரிபொருள் ஆற்றல் மற்றும் எரிபொருள் திறன் வளர்ப்பு ஆகியவற்றில் சிறிதளவே செய்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
மேலும் தற்போது பிரிட்டன் எரிபொருள் பயன்பாட்டில் நிலக்கரிப் பயன்பாடு அதிகரித்து வருகிறது, இதனால் கார்பன் வெளியேற்றம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
இந்தப் பட்டியலில் கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகள் 7வது, 8வது இடங்களில் உள்ளன. இந்த நாடுகளில் கார்பன் வெளியேற்றம் அதிகரித்துள்ளதோடு, எரிபொருள் ஆற்றல் மேம்பாட்டின் முழுப் பயனையும் இந்த நாடுகள் இன்னமும் உணரவில்லை என்று இந்த அறிக்கை கூறுகிறது.
இந்தப் பட்டியலில் 5ஆம் இடத்தில் உள்ள ஜப்பான் கியோட்டோ உடன்படிக்கை இலக்கை விட்டு தூர விலகியுள்ளது. மேலும் கார்பன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் இடைக்கால செயல்திட்டங்கள் எதனையும் ஜப்பான் அறிமுகம் செய்யவில்லை.
முன்பு கார்பன் வெளியேற்ற அளவில் குறைவாக இருந்த ரஷ்யா கடந்த 8 ஆண்டுகளாக இதற்கான செயல்திட்டங்கள் எதையும் நடைமுறைப்படுத்தவில்லை என்று இந்த அறிக்கை குறை கூறியுள்ளது.
வளரும் பொருளாதார நாடுகளான இந்தியா, பிரேசில், சீனா, மெக்சிகோ, தென் ஆப்பிரிக்கா ஆகியவை ஜி - 8 நாடுகளுடன் ஒப்பு நோக்கத்தக்கவை அல்ல என்று கூறியுள்ள இந்த அறிக்கை, இதனால் இந்த தரவரிசைப் பட்டியலில் இடம்பெறவில்லை என்று தெரிவித்துள்ளது.
ஆனால் இந்தியா தற்போது எடுத்துள்ள தேசிய செயல் திட்டத்தின் விளைவுகள் காரணமாக அடுத்த ஆண்டு தர வரிசையில் நுழையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.