இந்தியாவின் முதல் பாதுகாக்கப்பட்ட கடல்வாழ் உயிரினப் பகுதி லட்சத்தீவுகளில் அமைகிறது.
கேரளத்தின் கடற்கரைகளில் இருந்து லட்சத்தீவுகள் வரை கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வுகளுக்குப் பிறகு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பம்பாய் இயற்கை வரலாற்று கழகமும் (பி.என்.எச்.எஸ்.) லட்சத்தீவுகளில் உள்ள உள்ளூர் அமைப்பும் அரசுடன் இணைந்து கடல்வாழ் உயிரின ஆய்வில் ஈடுபட்டதாக பி.என்.எச்.எஸ். உதவி இயக்குநர் தீபக் அப்டெ தெரிவித்தார்.
கடந்த 2005 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த ஆய்வுத் திட்டம், பின்னர் இந்தியாவின் மிக வேகமான திட்டமாக மாறியது. இந்த ஆய்வில் பவளப்பாறைகளின் முக்கியத்துவம் குறித்து முழுமையாக ஆராயப்பட்டது.
சுற்றுச்சூழலைப் பத்திரமாகப் பாதுகாப்பதில் பவளப்பாறைகளுக்கு அதிகப்பங்கு உள்ளதால், அவற்றை 1972 வன உயிரிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்று தீபக் அப்டே கூறியதாக பி.டி.ஐ. செய்தி தெரிவிக்கிறது.
லட்சத்தீவுகளில் பாதுகாக்கப்பட்ட கடல்வாழ் உயிரினப்பகுதி அமைக்க வேண்டும் என்ற பரிந்துரையை உள்ளூர் பஞ்சாயத்து அமைப்பு அரசிற்கு அனுப்பியுள்ளது. அரசு அதை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.