பருவநிலை மாற்றம்: ஜி8 நாடுகளின் அமைச்சர்களிடம் இளைஞர்கள் வலியுறுத்தல்!
, வெள்ளி, 30 மே 2008 (14:28 IST)
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பான முயற்சிகளுக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள இளைஞர்கள், ஜப்பானில் ஜி8 நாடுகளின் சுற்றுச்சூழல் அமைச்சர்களைச் சந்தித்து பருவநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைள் குறித்து வலியுறுத்தினர்.பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக பிரிட்டிஷ் கவுன்சில் துவங்கியுள்ள இன்டர்நேஷனல் கிளைமேட் சேம்பியன்ஸ் (ICC) இயக்கத்தில் உள்ள, பிரேசில், ஜெர்மனி, இந்தியா, கனடா, சீனா, ஃபிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 46 இளைஞர்கள் ஜப்பானின் கோப் நகரத்தில் ஒருவாரம் கூடி, ஜி8 அமைச்சர்கள் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கையைத் (Kobe Challenge) தயார் செய்தனர்.
இந்த அறிக்கையை இந்தியாவின் சார்பாக இன்டர்நேஷனல் கிளைமேட் சேம்பியன்ஸ் (ICC) இயக்கத்தில் உள்ள உறுப்பினர் கரண் சேகலிடம் இருந்து ஜி8 நாடுகளின் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் சார்பாக ஜப்பான் சுற்றுச்சூழல் அமைச்சர் காமோசிட்டா, இந்தியச் சுற்றுச்சூழல் அமைச்சர் நமோ நாராயண் மீனா ஆகியோல் கடந்த 24 ஆம் தேதி பெற்றுக்கொண்டனர். இதுபற்றி டெல்லி பப்ளிக் பள்ளி மாணவரான கரண் சேகல்(17) கூறுகையில்,"பூமித் தாய் நமது தவறுகளை இன்னும் அதிக காலத்திற்குப் பொறுத்துக்கொள்ள மாட்டாள். எனவே உடனடி நடவடிக்கைகள் தேவை" என்றார். வடோதராவில் உள்ள புதுயுகம் உயர்நிலைப் பள்ளி மாணவி நிதி பட்டேல்(16), சென்னையில் உள்ள பத்ம ஷேசாத்ரி பாலபவன் பள்ளியைச் சேர்ந்த ஜஸ்வந்த் மாதவன்(17) ஆகியோர் கோப் சந்திப்பில் பங்கேற்ற
மற்ற இந்திய மாணவர்கள் ஆவர்.
நிதி கூறுகையில், "பருவநிலை மாற்றம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நாங்கள் குரல் கொடுத்து வருகிறோம். நாம் ஒன்றாகச் சேர்ந்து ஒரு அறைக்குள் நின்று குரல் கொடுத்தால் யாரும் கவனிக்க மாட்டார்கள். சமூகத்திற்கு இன்னும் நிறைய விழிப்புணர்வு தேவை என்பது மட்டும் தெளிவு" என்றார்.
முன்னதாக இன்டர்நேஷனல் கிளைமேட் சேம்பியன்ஸ் உறுப்பினர்கள் பிரிட்டன் சுற்றுச்சூழல் இணையமைச்சர் ஹிலாரி பென்னைச் சந்தித்தனர். அப்போது அவர், "பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக உலகெங்கும் உள்ள இளைஞர்கள் குரல்கொடுக்க வேண்டும். அதற்காக அற்பணிப்புடன் செயலாற்றும் இன்டர்நேஷனல் கிளைமேட் சேம்பியன்ஸ் உறுப்பினர்களை நான் பாராட்டுகிறேன்." என்றார்.
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் பற்றி சர்வதேச ரீதியாக கருத்தொற்றுமை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்த தலைவர்கள், உள்ளூர் முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் ஆகியோரை இணைத்து கார்பன் மாசு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது குறித்த விழிப்புணர்வு இயக்கங்களை உலகம் முழுவதும் நடத்துவதற்காக பிரிட்டிஷ் கவுன்சிலால் துவக்கப்பட்டது இன்டர்நேஷனல் கிளைமேட் சேம்பியன்ஸ் அமைப்பு.