Publish Date: Tue, 06 May 2008 (14:53 IST)
Updated Date: Tue, 06 May 2008 (14:52 IST)
உலகம் வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றத்தினால் இந்தியாவின் வேளாண் உற்பத்தியில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டு உணவுத் தட்டுப்பாடு உருவாகி சத்துக்குறைவினால் நோய்கள் பரவும் என்று ஐ.நா.வின் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகம் வெப்பமயமாதலால் ஆண்டிற்கு 10 முதல் 15 மீட்டர் வரை இமயமலை பனிப்பாறைகள் உருகுவதால் இந்தியாவில் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படும். ஜூலை முதல் செப்டம்பர் வரை கங்கையாற்றில் ஓடக்கூடிய நீர் மூன்றில் இரண்டு பங்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதால் வேளாண் உற்பத்தி பாதிக்கும்.
இந்த மாற்றங்களால் இந்தியாவின் மூன்றில் ஒருபங்கு பாசன நிலங்கள் பாதிக்கும். நீர்த் தட்டுப்பாடு சுமார் 50 கோடி மக்களைப் பாதிக்கும். வேளாண் உற்பத்தியில் ஏற்படும் பெரும் பாதிப்பினால், சத்துக்குறைவினால் தோன்றும் நோய்கள் அதிகரிக்கும்" என்று கூறியுள்ளது.
"பருவநிலை மாற்றத்தினால் ஒட்டுமொத்த உற்பத்தி குறைவதால், 2080 ஆம் ஆண்டில் உணவு தானியங்களின் விலை 3 மடங்கு அதிகரிக்கும்.
வேளாண் நிலங்கள் இழப்பினால் ஏற்படும் உணவு உற்பத்தி பாதிப்பினால் உருவாகும் உணவுப் பாதுகாப்பின்மை, வாழும்தகுதி இழப்பு ஆகியவற்றைப் போலவே, கடல் மட்டம் அதிகரிப்பு, இந்தியாவின் தாழ்வான பகுதிகளில் கடற்கரை அரிப்பு ஆகியவற்றால் மீன்பிடி தொழில் பாதிக்கப்படும்.
உலகளவிலான பருவநிலை மாற்றம், அதனால் ஏற்படும் வேறுபாடுகள் குழுந்தைகளிடம் ஊட்டச்சத்துக் குறைவு அதிகரிக்கும்" என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.