கடந்த 50 ஆண்டுகளாக உலகம் வெப்பமயமாதல் நிகழ்வினால் கடலடியில் ஆக்ஸிஜன் குறைந்து வருவதாகவும், இதனால் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து அதிகரித்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து நேச்சுர் மெகசைன் இதழில் வெளியாகியுள்ள ஆய்வறிக்கை ஒன்றில், தற்போதுள்ள சுற்றுச்சூழல் சீர்கேடுகள் தொடருமானால் கடல் உயிர்ச் சமநிலை கடுமையாக பாதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடலடியில் 'ஆக்ஸிஜன் குறைந்த பகுதி'கள் விரைவில் ஆக்ஸிஜனே இல்லாத பகுதிகளாக மாறிப்போகும் ஆபத்து அதிகரித்துள்ளதாக டிஸ்கவரி எச்சரிக்கிறது.
பெருங்கடல்களில் 'ஆக்ஸிஜன் குறைந்த பகுதி' அடிப்பகுதியில் பரவுவதுடன், மேல்நோக்கியும் பரவிவருவதாக புதிதாக நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.
பெருங்கடல்களில் மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாகவும், கழிவு நீர் கலப்பது அதிகரித்துள்ளதன் காரணமாகவும், ஆக்ஸிஜன் சுழற்சி குறைந்து கடல் மேற்பரப்பின் வெப்பநிலை அதிகரிக்கிறது என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.
ஜெர்மனியில் உள்ள கெய்ல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லோதர் ஸ்டிராமா தலைமையிலான ஆய்வாளர்கள் நடத்திய ஆராய்ச்சியில், உலகின் மூன்று முக்கியப் பெருங்கடல்களில் 300 முதல் 700 மீட்டர் வரையிலான ஆய்வில் ஆக்ஸிஜன் சுழற்சி குறைந்துள்ளது தெரியவந்துள்ளதாக நேச்சுர் மெகசைன் தெரிவிக்கிறது.