பருவ நிலை மாற்றங்களால் உலகின் ஏழைக் குழந்தைகள் அதிகமானோர் பாதிக்கப்படுவர் என்று ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவசர நடவடிக்கை தேவை என்றும் அந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து யூனிசெஃப் அமைப்பு வெளியிட்டுள்ள "நம் சூழல், நம் குழந்தைகள், நம் பொறுப்பு" என்ற அறிக்கையில் பருவ நிலை மாற்றங்களால் உலகெங்கிலும் உள்ள ஏழைக் குழந்தைகள் சுகாதாரம் கல்வி மற்றும் வாழ்வாதார தேவைகள் அளவில் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று கூறுகிறது.
"பருவ நிலை மாற்றத்தில் காட்டும் அலட்சியம், குழந்தைகள் மீது காட்டும் அலட்சியப்போக்கு" என்று யூனிசெஃப் வர்ணித்துள்ளது.
பருவ நிலை மாற்றங்களின் மோசமான விளைவுகளால் ஆசியா, ஆப்பிரிக்க நாடுகளில் ஆண்டொன்றிற்கு 40,000 முதல் 1,60,000 குழந்தைகள் உயிரிழக்க நேரிடலாம் என்றும் அந்த அறிக்கையில் யூனிசெஃப் எச்சரிக்கை செய்துள்ளது.
வெப்ப அளவு 2 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால் உலகெங்கிலும் 200 மில்லியன் பேர்களும், 3 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால் 550 மில்லியன் பேர்களும் பட்டினிக்கு தள்ளப்படுவார்கள் என்ற புள்ளி விவரத்தை யூனிசெஃப் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
பருவ நிலை மாற்றங்களால் ஏழைக் குடும்பங்களில் மேலும் தீவிரமாக தலை தூக்கும் பொருளாதார சீரழிவு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவிடாமல் செய்யும். இதனால் பள்ளியில் கிடைக்கும் ஒரு வேளை உணவும் குழந்தைகளுக்கு கிடைக்காமல் போகும் என்று கூறுகிறது யூனிசெஃப்.
வெப்ப நிலை 2 டிகிரி செல்சியஸ் அதிகரிப்பதை ஒரு போதும் இனி தடுக்க முடியாது என்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது இத்தனை ஆண்டுக் கால கார்பன் வெளியேற்றத்தின் விளைவுகளால் 2 டிகிரி செல்சியஸ் உயர்வை இனி தடுக்க முடியாது என்று கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.
மேலும் சீனாவில் வாரம் ஒரு நிலக்கரி மின்சக்தி நிலையம் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏற்படும் கார்பன் வெளிப்பாட்டையும் கட்டுப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது என்று உலக நாடுகள் தெரிவித்துள்ளன.
உலகிலேயே கார்பன் புகை வெளிப்பாட்டில் அமெரிக்காவை சீனா விரைவில் பின்னுக்குத் தள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே உணவுப் பொருட்கள் பற்றாக்குறைக்கும், வானளாவிய விலை உயர்விற்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளுமே பொறுப்பு என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.
ஐ.நா. உணவுக்கான உரிமை சிறப்பு பொறுப்பாளர் ஜீன் ஸெய்க்ளர், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகளின் எரிபொருள் கொள்கையால் மட்டுமே தற்போதைய உணவு தானிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
தானியப் பயிர்களை எரிபொருள் தயாரிப்பிற்காக பயன்படுத்துவது இந்த நாடுகளில் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்ததன் விளைவினால், ஏழை நாடுகளின் குழந்தைகள் முற்றிலும் உணவின்றி வாட நேரிடும் நிலை ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.