நாட்டில் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் நீர்நிலைகளிலும், நிலங்களிலும் விடப்படுவதால் நிலத்தடி நீர் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருவதாகவும், நாட்டில் உள்ள 65 நகரங்களில் காற்று மாசு தரக் கட்டுப்பாட்டு குறியீட்டுக்கும் மேலாக காற்று மாசு அடைந்துள்ளதாகவும், இதுதவிர 24 நகரங்களில் வீசும் காற்று கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும் கண்டறியப்பட்டு உள்ளது என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலாளர் பி.சென் குப்தா தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத் தலைநகர் கொல்கட்டாவில் 3 நாட்கள் நடைபெறும் சுற்றுச் சூழல் பங்குதாரர் மாநாடு-2008 யை தொடங்கி வைத்துப் பேசிய மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலாளர் பி.சென் குப்தா, நாட்டில் வார்பட தொழிற்சாலைகள், செங்கல் சூளைகள், எலெக்ட்ரோபிளேட்டிங் உற்பத்தி நிறுவனங்கள், மறுஉருட்டு ஆலைகள், கல் உடைக்கும் ஆலைகள் உள்ளிட்ட 17 சிறு தொழில் நிறுவனங்கள் அதிகபட்சம் மாசு உருவாக்கும் நிறுவனங்களாக இனம் கண்டறியப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கழிவு வெளியேற்றமும், மறுசுழற்சியும் கடமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். நாட்டில் உள்ள நகராட்சிப் பகுதிகளில் தினந்தோறும் 1,20,000 டன்கள் திடக்கழிவுகள் உருவாவதாகவும், இதில் 70 விழுக்காடு அளவுக்கே முறையாக சேகரிக்கப்படுவதாகவும், அதிலும் 5 விழுக்காடு அளவு திடக்கழிவுகளே முறைப்படி மறுசுழற்சி செய்யப்பட்டு அப்புறப்படுத்தப் படுவதாகவும் சென் குப்தா கூறியுள்ளார்.
நாட்டில் தற்போது உள்ள நிறுவனங்களில் 29,716 நிறுவனங்களில் இருந்து 81 லட்சத்து 40 ஆயிரம் டன்கள் தீங்கிழைக்கும் கழிவுகள் வெளியேற்றப் படுவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த கழிவுகளை எடுத்துச் சென்று சேகரித்து வைத்து மறுசுழற்சி செய்ய தற்போது நாட்டில் 21 நிலையங்கள் தான் உள்ளன என்றும், இதுபோன்ற நிலையங்கள் குறைந்தபட்சம் இன்னும் 50 நிலையங்கள் தேவையென்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
நாட்டில் உள்ள நிலக்கரி சார்ந்த மின் உற்பத்தி நிலையங்கள் ஆண்டுதோறும் 11 கோடியே 20 லட்சம் டன்கள் சாம்பலை உற்பத்தி செய்த வருகின்றன. அதேப்போல நாள் ஒன்றுக்கு நாட்டில் 3,300 கோடி லிட்டர் கழிவுநீர் உருவாகின்றது, இதில் 700 கோடி லிட்டர் கழிவுநீர்தான் மறுசுழற்சிக்கு உட்படுத்தப் படுகின்றது. மீதமுள்ள இந்த ஆபத்தான கழிவுகள் எல்லாம் அப்படியே சுத்திகரிக்கப் படாமல் நீர்நிலைகளிலும், காலியான நிலப்பகுதிகளிலும் விடப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் கடுமையாக மாசு அடைவதாகவும் சென்குப்தா தெரிவித்து உள்ளார்.
இந்த மோசமான சூழ்நிலையைத் தடுக்க கழிவு நீரை சேகரித்து, பல்வேறு கட்டங்களாக சுத்திகரித்த பின்னர், அந்த நீரை கொண்டுபோய் விடும் நீர் ஆதாரத்தின் மாசு கட்டுப்பாட்டு அளவுக்கு ஏற்ற வகையில் நிறுவனங்கள் செயல்பட உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். சுத்திகரிக்கப்பட்ட நீரை விவசாயத்திற்கும், மற்ற உபயோகங்களுக்கும் பயன்படுத்த தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். சுற்றுச்சூழல் பாதுகாப்பை காக்கும்விதமாக வர்த்தக நிறுவனங்கள், 8 வகையான நடவடிக்கைகளை வகுத்துச் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மேற்குவங்க மாநில சுற்றுச்சூழல் துறை முதன்மைச் செயலாளர் எம்.எல். மீனா, தனியார் பேருந்துகளும், ஆட்டோக்களும் தான் மாநகரப் பகுதிகளில் வாகன மாசுக்கு அதிக காரணமாக அமைந்துள்ளன. இவற்றில் இருந்து வெளியாகும் கார்பன் மோனாக்ஸைடு, கார்பன்-டை-ஆக்ஸடு ஆகியவற்றை குறைக்க மாநில அரசு இந்த ஆண்டு முதல் கட்டமாக 5,000 ஆட்டோக்களை திரவ பெட்ரோல் எரிவாயு அடிப்படையில் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், இத்திட்டத்தின் கீழ் வரும் ஆட்டோ ஒன்றுக்கு 50 விழுக்காடு ஊக்கத் தொகை வழங்க உள்ளதாகவும் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு இத்திட்டத்தில் 10,000 ஆட்டோக்களை கொண்டு வர திட்டமிட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.