புவி வெப்பமடைதலை குறைப்பதற்காக அரசு மேற்கொள்ளும் தேச திட்டத்தின் ஒரு அங்கமாக பசுமைத் தொழில்நுட்பத்தை உருவாக்க முதலீட்டு கடன் அளிக்க தனி நிதியை ஏற்படுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்!
தலைநகர் டெல்லியில் நடைபெறும் நீடித்த மேம்பாட்டு மாநாட்டை துவக்கி வைத்துப் பேசிய பிரதமர், புவி வெப்பமடைதலை தடுப்பதற்கான பிரதமர் தலைமையிலான பேரவை தேச அளவிலான ஒரு திட்டத்தை உருவாக்கி வருவதாகத் தெரிவித்தார்.
உலகளாவிய அளவில் புவி வெப்பமடைதலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் அதே நேரத்தில் தேச அளவிலும், மாநில அளவிலும் அந்நடவடிக்கையை நாமும் மேற்கொள்வோம் என்று பிரதமர் கூறினார்.
சுற்றுச் சூழல் பிரச்சனையை உலகளாவிய அளவில் புவி வெப்பமடைதலாக உருவாகி ஒரு மிகப்பெரிய பொதுச் சிக்கலாக உருவெடுத்துள்ளது என்றும், இதனை ஒட்டுமொத்தப் பிரச்சனையாக எதிர்கொண்டே தீர்வு காண வேண்டும் என்றும், அதற்கு மானுட ஒற்றுமையை உருவாக்கக் கூடிய ஒட்டுமொத்த வாய்ப்பை உருவாக்க வேண்டியது அவசியம் என்றும், நாம் அந்தப் பொறுப்பை ஏற்று சிரத்தையுடன் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பிரதமர் கூறினார்.
புவி வெப்பமடைதலை தடுப்பதற்கான தேச அளவிலான திட்டம் வரும் ஜூன் மாதத்திற்குள் வெளியிடப்படும் என்று பிரதமர் கூறினார்.