அரவிந்த் கெஜ்ரிவாலின் பதவி விலகல் உரை
Publish Date: Sat, 15 Feb 2014 (17:20 IST)
Updated Date: Sat, 15 Feb 2014 (17:15 IST)
டெல்லியில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரவிந்த் கெஜ்ரிவால் ஆற்றிய உரையின் முழு வடிவம்
டிசம்பர் 28 இல் நாங்கள் பதவி பிரமாணம் ஏற்றோம். ஊழலுக்கு எதிரான மிக வலுவான சட்டமாக ஜன் லோக்பால் மசோதை நிறைவேற்றுவது என்பதே எங்களுடைய வாக்குறுதிகளிலேயே மிகவும் பெரியது. இந்த காங்கிரஸ் கட்சியினர் சட்டமன்றத்தில் ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற ஆதரவு அளிப்போம் என்று எழுத்துபூர்வமாகவே கொடுத்திருந்தார்கள். ஆனால் இன்று சட்டமன்றத்தில், நாங்கள் ஜன் லோக்பால் மசோதாவை முன்வைத்தபோது, காங்கிரசும் பாஜகவும் கைகோர்த்துக்கொண்டன.இந்திய வரலாற்றிலேயே இப்படி நடந்ததில்லை. ஆனால் இன்று அவர்கள் கைகோர்த்துக்கொண்டனர். நமக்குப் பின்னால், திரைமறைவிலிருந்து கொண்டு அவர்கள் நாட்டைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்தார்கள். கடந்த இருநாட்களில் அவர்களது உண்மையான முகம் வெளியே தெரிந்துவிட்டது. ஜன் லோக்பால் மசோதாவை முன்மொழியப்படுவதைக்கூட அனுமதித்துவிடக்கூடாது என்பதற்காக அதை உத்தரவாதப்படுத்துவதற்காக அவர்கள் கைகோர்த்துக்கொண்டார்கள்.நண்பர்களே, மூன்று நாட்களுக்கு முன், நாங்கள் முகேஷ் அம்பானி மீது எஃப்ஐஆர் பதிவு செய்தோம். இந்த நாட்டின் அரசாங்கத்தை நடத்தும் நபர்தான் முகேஷ் அம்பானி என்பவர். காங்கிரஸ் கட்சி என்னுடைய கடை என்று முகேஷ் அம்பானி கூறியிருக்கிறார். எப்போது வேண்டுமானாலும் காங்கிரஸ் கடையிலிருந்து அவர் வேண்டியதை வாங்கிக்கொள்வாராம். 10 ஆண்டுகளாக ஐமுகூ அரசை முகேஷ் அம்பானிதான் இயக்கிக்கொண்டிருந்தார். கடந்த ஓராண்டு காலமாக முகேஷ் அம்பானி மோடியையும் ஆதரித்துவருகிறார்.எங்கேயிருந்து மோடிக்கு இவ்வளவு பணம் வருகிறது? ஹெலிகாப்டர்களில் அவர் ஊர் சுற்றுகிறார், பெரிய பெரிய பேரணிகளை நடத்துகிறார். எங்கேயிருந்து இதெற்கெல்லாம் பணம் வருகிறது? இவற்றுக்குப் பின்னால் முகேஷ் அம்பானி இருக்கிறார்.நண்பர்களே, நாங்கள் முகேஷ் அம்பானிக்கு எதிராக குரலை உயர்த்திய அடுத்த நொடியிலேயே காங்கிரசும் பாஜகவும் ஒன்றுசேர்ந்து கொண்டன. ஜன் லோக்பால் மசோதாவை முன்வைக்க அவர்கள் விடவில்லை.கெஜ்ரிவால் ஏதோ ஒரு குட்டி ஒரு லஞ்ச ஒழிப்பு அலுவலர்தானே என அவர்கள் நினைத்துவிட்டார்கள். இந்த அளவுக்கு குடைச்சல் கொடுக்கிறானே என்று கடுப்பாகிவிட்டார்கள். ஜன் லோக்பால் மசோதா சட்டமாகிவிட்டால் இந்த ஆட்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஜெயிலுக்கு போகவேண்டியிருக்கும். அதனால்தான் இந்த இரு கட்சிகளுமே சேர்ந்து இந்த மசோதாவை வைக்கமுடியாமல் ஒழித்தன.இப்போது நாங்கள் முகேஷ் அம்பானியையும் வீரப்ப மொய்லியையும் அம்பலப்படுத்தியிருக்கிறோம். அநேகமாக நாளை ஷரத் பவாரை அம்பலமேற்றியிருப்போம். அடுத்து அநேகமாக கமல்நாத் முறையாக இருந்திருக்கும். எப்படியோ, அவர்கள் ஒவ்வொருவராக மாட்டியிருப்பார்கள்.