கெஜ்ரிவால் வீட்டில் அலைமோதும் கூட்டம்: வெற்று பந்தா அரசியல்வாதிகளின் காலம் முடிவுக்கு வருகிறதா?
, திங்கள், 30 டிசம்பர் 2013 (15:09 IST)
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் காசியாபாத் நகரில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்து வருகிறார். இன்னும் 2 நாட்களில் வாடகை வீட்டிற்கு குடிபெயர்கிறார்.
டெல்லியின் துணைக்கோள் நகரமாக திகழும் காசியாபாத் உத்தரபிரதேச மாநிலத்தின் ஒரு பகுதியாகும். அங்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கிர்னர் குடியிருப்பை மத்திய வருவாய் துறை தன் அதிகாரிகளை குடியமர்த்த வாங்கியது.அரவிந்த் கெஜ்ரிவால் ஐஆர்எஸ் அதிகாரி என்பதால் கவுசாம்பியில் உள்ள அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்க வீடு ஒதுக்கியது. அங்குள்ள 4-வது மாடியில் ஒரு வீட்டில் கெஜ்ரிவால் தன் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த குடியிருப்பில் வசித்து வரும் கெஜ்ரிவால், அந்த குடியிருப்பில் உள்ள அனைவருடனும் எளிமையாக பழகினார். இதனால்தான் ஆம் ஆத்மி கட்சி தொடங்கி பிரபலமான பிறகும் கூட அவர் தன் எளிய 4-வது மாடி வீட்டை மாற்றிக் கொள்ளவில்லை.ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் தினமும் நூற்றுக்கணக்கில் அந்த குடியிருப்பு முன்பு திரள்வது வழக்கம். கெஜ்ரிவால் முதலமைச்சராக மந்திரியாக பொறுப்பு ஏற்க போவதாக அறிவிக்கப்பட்ட நாள்முதல் அங்கு தினமும் மக்கள் வெள்ளம் போல திரண்டு வருகிறார்கள்.
இதற்கிடையே 15-க்கும் மேற்பட்ட தனியார் தொலைக்காட்சிகள் தங்களது நேரடி ஒளிபரப்பு வாகனங்களை அங்கு நிரந்தரமாக நிறுத்தியுள்ளன. இதனால் கெஜ்ரிவால் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்படுகிறது.