டிசம்பர் 24: பெரியார் நினைவு நாள் - கி.வீரமணி சிறப்பு பேட்டி
, செவ்வாய், 24 டிசம்பர் 2013 (19:39 IST)
டிசம்பர் 24 பெரியாரின் 40-வது நினைவு நாளை ஒட்டி திராவிடர் கழகத் தலைவரும், விடுதலை நாளிதழின் ஆசிரியருமான கி.வீரமணி அவர்களின் சிறப்பு பேட்டி.
பெரியார் அரசியல், பண்பாடு ஆகிய தளங்களில் முழு வீச்சுடன் பணியாற்றினார், பெரியாருக்குப் பிறகு திராவிடர் கழகத்தின் அரசியல், பண்பாட்டு வெற்றி என்ன?தாராளமான வெற்றி..! அதற்கு உதாரணம் சொல்ல வேண்டுமானால், பெரியாருடைய காலத்தில் அடிப்படையான செய்தி சமூக நீதி. சமூக நீதியை பொருத்தவரை மத்திய அரசாங்கத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்பது இல்லாமல் இருந்தது. அதற்காக போராடிக் கொண்டிருந்தோம். மாநில அரசிலும் ஓரளவுக்கு போராட்டம் இருந்தது. முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் வந்த போது பெரியாரிடத்தில் சென்று பேட்டி கண்டது. அப்போது பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 49 சதவீதமாகக் கூட உயர்த்தலாம் என்று கூறினார். அதுவரை 41 இடங்கள் மட்டுமே இருந்தது. காரணம் அரசியல் சட்டத்தில் 50க்கும் கீழே இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். இதன் விளைவாகத்தான் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 31 சதவிகிதமாக கலைஞர் கருணாநிதி அவர்களின் ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்டது. இது அண்ணா அவர்களின் காலத்திலேயே அறிவிக்கப்பட்டது. இதுவே கலைஞர் கருணாநிதி அவர்களின் ஆட்சி காலத்தில் பெரும் சாதனையாக கருதப்பட்டது.இந்த சமூகநீதி காரணமாகவே பெரியார் அவர்கள் அரசியல் தளத்தைவிட்டு, காங்கிரசை விட்டு வெளியே வந்தார். சுயமரியாதை இயக்கம் வந்தது. சுயமரியாதை இயக்கம் என்பதன் அரசியல் நிலை என்று சொன்னால் அதுவே சமூகநீதி தான். சமூகநீதியை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்கிறேன். தமிழகத்தை பொருத்தவரை எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்து இட ஒதுக்கீட்டில் ரூ.9000 வருமான வரம்பு என்று ஒரு வருமான வரம்பை புகுத்தி பிடிவாதமாக செயல்படுத்தினார். ஆனால் அந்த சமயத்தில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் செல்வாக்கு மிகுந்த எம்.ஜி.ஆர். 2 இடங்களைத் தவிர அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்தார். அதன்பிறகு தான் தன்னுடைய நிலைப்பாடு தவறு என்று உணர்ந்தார். ஒரு சர்வ கட்சி கூட்டத்தை ஏற்பாடு செய்து இந்த பிரச்சனையில் திராவிடர் கழகத்தின் நிலைப்பாடுதான் சரி என்று அறிவித்தார்.
1980 - 1981
லிருந்து 69 சதவீதம் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியினருக்கு 69 சதவீதம் இட ஒதுக்கீடு என்று இருந்தது. அதற்கு ஒரு ஆபத்து மண்டல் கமிஷன் தீர்ப்பிலேயே 9 நீதிபதிகளைப் போட்டு இடஒதுக்கீடு பற்றி ஒரு Constitutional bench-ஐ உருவாக்கினார்கள். தடை விதித்தார்கள். நாங்கள் அந்த ஆணையை எரித்து சாம்பல் மூட்டை மூட்டையாக அனுப்பினோம். ரங்கநாத் மிஸ்ரா என்ற நீதிபதி தலைமையில் ஆய்வு செய்து மண்டல் கமிஷன் அறிக்கை செல்லும் என்று தீர்ப்பு வந்தது. இதனாலேயே வி.பி.சிங் பதவியை விட்டு போக வேண்டியதாயிற்று. ஏனென்றால் பாஜக வெளியிலிருந்து ஆதரவு கொடுத்து வந்தார்கள். அவர்கள் மண்டலை காரணம் காட்டி ஆதரவை வாபஸ் பெற்றனர். கமண்டலைக் காட்டி மண்டலை விட்டார்கள் என்று வி.பி.சிங் சொன்னார்கள். வி.பி.சிங் ஆட்சியில் வேலை வாய்ப்பில் 27 சதவீத இட ஒதுக்கீடு வரும் என்று செயல்பட வைத்தது திராவிடர் கழகம். இவையனைத்தும் பெரியாருக்கு பிறகான வெற்றி..! இவற்றையெல்லாம் ஆட்சி நேரடியாக செய்ததென்றாலும் இதற்கு உந்து சக்தியாக கரணையாக இருந்தது திராவிடர் கழகம்தான்.