ராணுவ வெறியை அடுத்து மத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்!
, புதன், 3 ஏப்ரல் 2013 (17:47 IST)
மியான்மரில் ராணுவ ஆட்சியின் அதிகாரம் கொஞ்சம் காலமாக அடங்கி புத்த மதவெறி அங்கே தலைதூக்கி உள்ளது. இதன் உச்சமாக அங்கு முஸ்லிம் மக்கள் மீதான கொலைவெறித் தாக்குதல் நடைபெற்றுவருகிறது. இரண்டாம் உலகப் போரில் பர்மிய - ஜப்பானிய ராணுவத்தினரால் சுமார் 5,000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். அதுதான், மியான்மரில் முஸ்லிம்கள் மீதான தாக்குதலின் தொடக்கம். இன்று வரை 20,000 முஸ்லிம்களைக் கொன்று, 4,000 குடும்பங்களை அழித்து, 300-க்கும் மேற்பட்ட மசூதிகளை மூடியுள்ளது மியான்மரில் ஆட்சி நடத்தும் புத்தமதம் பிடித்த அரசு பல லட்சம் முஸ்லிம்களை நாட்டைவிட்டுத் துரத்தியுள்ளது. ‘ரோஹிங்யா’ முஸ்லிம்கள் என்றழைக்கப்படும் இவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சம். பர்மாவின் சுதந்திர காலக்கட்டத்துக்கு முன்பிருந்தே அங்கே குடியிருக்கும் இவர்களுக்கு இன்று வரை குடியுரிமை கிடையாது. அவர்களின் விருப்பம்போல் திருமணம்செய்ய முடியாது. கல்வி பயில முடியாது. இந்த முஸ்லிம்களின் குழந்தைகள் பலர் கொத்தடிமைகளாக உள்ளனர். வேற்று நாட்டு முஸ்லிம் சுற்றுலாவாசிகள் வருவதற்குக்கூட தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.சிறந்த ஜனநாயகவாதியாகப் பார்க்கப்படும் ஆங் சான் சூகியும் முஸ்லிம்களின் நிலையைப் பற்றி பெரிதாகப் பேசுவது இல்லை என்பதுதான் வேதனையின் உச்சகட்டம். இப்படி, அனாதைகளைப் போல மியான்மரில் வாழ்ந்து வரும் இவர்களை மதக் கலவரங்கள் மேலும் அனாதையாக்கிவிட்டன.கடந்த மாதம் 20-ம் தேதி, அங்கு மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. ‘மெய்கிட்லி’ என்ற நகரத்தில் ஒரு முஸ்லிம் தங்க வியாபாரிக்கும் இரண்டு பௌத்த வாடிக்கையாளர்களுக்கும் நடந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி, அதில் ஒரு புத்தத் துறவி இறந்துவிட்டதுதான் கலவரத்துக்கான காரணம். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மெய்கிட்லி நகர வீதிகளின் கடைகள், வாகனங்கள், மசூதிகள், வீடுகள் ஆகியவை புத்த மதத்தினரால் கொளுத்தப்பட்டன. புத்தத் துறவிகள் ஆயுதங்களோடு வந்து முஸ்லிம்களைத் தாக்கினர். இந்தக் கலவரத்தில் 20 பேர் கொல்லப்பட, 2,000 பேர் வீடுகளை இழந்துள்ளனர். இவர்களோடு புத்த மதத்தினரும் கூட, புத்தத் துறவிகளின் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போது மெய்கிட்லி நகரம் முழுவதும் ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதேபோல் சென்ற ஆண்டு ரக்ஹைன் மாநிலத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 100-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டு, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்தனர்.‘மதங்களே வேண்டாம்’ என்றவர் புத்தர். அவர் பெயரில் மதத்தை உருவாக்கி இவ்வளவு படுகொலைகள் நடப்பதுதான் நடப்பு.