அலைகழிப்பு...பணம் பறிப்பு... அலட்சியம்... நோயாளிகள் குமுறல்
, சனி, 19 ஜனவரி 2013 (17:03 IST)
இதுதான் பிரசவ வார்டு. இங்குதான் பணம் பறிப்பு அதிகமாக நடக்கிறது.ஏழைகள் நாடிச் செல்வது அரசு மருத்துவமனையைதான். ஆனால் அந்த அரசு மருத்துவமனையே பணம் பறிக்கும் இடமாக இருந்தால் ஏழைகள் எங்கேதான் போவார்கள். நோயாளிகள் அலைகழிக்கப்படும் கொடுமை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அரங்கேறி வருகிறது. இதற்கு முன்னுதாரமாக விளங்கி வருகிறது திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கான ஏழைகள் சிகிச்சைக்காக வந்து செல்கிறார். இந்த மருத்துவமனையில் வெளிநோயாளிகள் பதிவு செய்யுமிடம், உள்நோயாளிகள் பதிவு செய்யுமிடம், அவசர சிகிச்சைப் பிரிவு, விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு, மருந்தகம், ஊசி போடுமிடம் (ஆண்கள், ஊசி போடுமிடம் (பெண்கள்), கட்டு கட்டுமிடம், தீவிர சிகிச்சைப் பிரிவு, காசநோய் சிகிச்சைப் பிரிவு, சிறப்பு சிகிச்சைப் பிரிவு, காது, மூக்கு, தொண்டை பிரிவு, சிறப்பு சிகிச்சைப் பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு, சிசு தீவிர சிகிச்சைப் பிரிவு, ஆண்கள் மருத்துவ பிரிவு,
பிரசவம், அறுவை சிகிச்சைக்கு பின் பெண்கள் சேர்க்கப்படும் வார்டு.பெண்கள் மருத்துவ பிரிவு, கண் சிகிச்சைப் பிரிவு, பல் மருத்துவப் பிரிவு, பிரசவ முன் கவனிப்பு பிரிவு, பிரசவ பின் கவனிப்பு பிரிவு, பிரசவ வார்டு மகப்பேறு அவசர சிகிச்சைப் பிரிவு, பச்சிளம் குழந்தைகள் வார்டு, ஆண்கள் மருத்துவ வார்டு, பெண்கள் மருத்துவ வார்டு, அறுவை சிகிச்சை வார்டு, அறுவை அரங்கு, அறுவை பின் கவனிப்பு வார்டு (ஆண்கள்), அறுவை பின் கவனிப்பு வார்டு (பெண்கள்), குடும்பல நல பிரிவு, சித்தா மருத்துவப் பகுதி, பால்வினை நோய் சிகிச்சைப் பிரிவு, இரத்த வங்கி, எக்ஸ்ரே, இ.சி.ஜி., ஸ்கேன், ஐசிடிசி பிரிவு ஆகியவை உள்ளன.ஆனால் மருத்துவமனையில் ஸ்கேன் இருந்தும் அது செயல்படாமல் 4 ஆண்டுகளாக இருந்து வருகிறது. மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணி பெண்கள் ஸ்கேன் எடுக்க வேண்டும் என்றால் தனியார் ஸ்கேன் மையத்திற்குதான் செல்ல வேண்டும்.
ஸ்கேன் எந்திரம் இல்லாததது மருத்துவமனை கண்காணிப்பாளர் சேகருக்கு தெரிந்தும் கூட, அவற்றை சரிபார்த்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் இதுவரை அவருக்கு வந்ததில்லை. அரசு மருத்துவமனை டாக்டர்கள் அருகில் உள்ள தானியாருக்கு சொந்தமான கோகுல் ஸ்கேன் மையத்திற்குதான் நோயாளிகளை அனுப்பிவைக்கிறார்கள். ஏன் என்று பார்த்தால் அரசு மருத்துவமனையில் முக்கிய இடங்களில் கோகுல் ஸ்கேன் மையத்தின் பெயர் கொண்ட காலண்டர்கள்தான் தொங்கவிடப்பட்டுள்ளது.இந்த தனியார் ஸ்கேன் மையத்தில் உடலில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு ரேட் வைக்கப்பட்டுள்ளது. வயிற்று பகுதிக்கு 500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இப்படி அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், கர்ப்பிணிகள் அனைவரும் கோகுல் ஸ்கேன் மையத்திற்குதான் படையெடுக்கிறார்கள். கோகுல் ஸ்கேன் மையத்திற்கும், அரசு மருத்துவமனை டாக்டர்களுக்கும் என்ன டீல் என்றே தெரியவில்லை.
கர்ப்பிணி பெண்ணிடம் வலுக்கட்டாயமாக பணம் கேட்டும் மருத்துவமனை பெண் ஊழியர்.இது ஒரு பக்கம் அரங்கேறினாலும், ஏழை கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்கு அரசு மருத்துவமனையை நாடி வருகின்றனர். பணம் இல்லாத என்ற ஒரே காரணத்திற்காக அரசு மருத்துவமனையை நம்பி வரும் அவர்களிடம் பணத்தை கறப்பது எவ்வளவு கேவலமான செயல். ஆனால் அந்த கேவலமான செயலில் அரசு மருத்துவமனை ஊழியர்கள் ஈடுபட்டு வருவதுதான் வேதனை.