Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டெல்லி மாணவி கற்பழிப்பு; சில சிந்தனைகளும் கண்டனங்களும்!

டெல்லி மாணவி கற்பழிப்பு; சில சிந்தனைகளும் கண்டனங்களும்!
, திங்கள், 7 ஜனவரி 2013 (19:25 IST)
FILE
டெல்லியில் மருத்துவ மாணவி கொடூரமாக கற்பழிக்கப்பட்டு பல நாட்கள் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிய பிறகு மாணவி உயிர் பிரிந்தது உலகையே உலுக்கியுள்ளது. இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். தொடங்கி வலது சாரிகளின் பேச்சுக்கள் மிகவும் அருவருப்பைக் கிளப்பி வருகிறது.

மேலும் பலர் கூறும் கருத்துக்கள் சூழ்நிலையின் தீவிரத்தை உணராததாகவே படுகிறது.

டெல்லியில் கடும் போராட்டம் நடந்தது, காவலர் ஒருவர் பலியானார். பெண்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இதனை மத்தியதர வர்க்க வெளிப்பாடு என்று கொஞ்சம் சிந்திப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் அறிவு ஜீவிகள் பலர் பேஸ்புக், பிளாக் என்று கருத்து மழை பொழிந்து வருகின்றனர்.

அவர்கள் எழுப்பும் பிரதானமான கேள்விகளில் முக்கியத்துவம் வாய்ந்தது, இந்த போராட்டம் ஏன் இலங்கையில் தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்படும்போது ஏன் வெடிக்கவில்லை. நாட்டில் காலங்காலமாக தலித் மற்றும் பழங்குடியினப் பெண்கள் அனுபவித்து வரும் கொடுமைக்கு எதிராக எங்கே போயிற்று இந்த குரல்கள் என்று கேள்வி எழுப்புகின்றனர்.

இந்தக் கேள்விகளின் நியாயம், நடந்த கொடூரத்திற்கான எதிர்ப்பை மட்டம் தட்டுவதில் போய் முடிந்துள்ளது. இது மிகப்பெரிய கொடுமையாகும். டெல்லி கற்பழிப்பில் நடந்த வன்முறை, வன்கொடுமை பயங்கரமானது என்பதால் இந்தப்போராட்டம் வெடித்தது. மேலும் வரலாற்றில் ஏதாவது சில விவகாரங்கள் மட்டுமே போராட்டத்திற்கான களமாக இருந்து வருவதை ஒருவராலும் ஒன்றும் செய்யவியலாது. இப்போதாவது இது பற்றி போராட்டம் வெடிக்கிறதே என்றுதான் இதனை உடன்பாடான தன்மையில் அணுகவேண்டும்.

மேலும் இதனை ஒரு பாடமாக வலியுறுத்தி இதுவரையிலான பாலியல் வன்முறை வழக்குகளை மறு பரிசீலனை செய்ய வழக்குகள் தொடரப்படவேண்டும், வாச்சாத்தி பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும் டெல்லி பெண்ணுக்கு ஏற்பட்ட கொடுமையையும் இணைத்தே பார்க்கவேண்டும், வாச்சாத்தி பெண்களை கற்பழித்த போலீசாருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படவேண்டும் என்றெல்லாம் இதனை வைத்து நிறைய வேலைகள் பாக்கியுள்ளது. இதனைவிடுத்து இது மிடில்கிளாஸ் போராட்டம் என்று இதிலும் ஒரு வர்க்கப்பார்வையை முன்வைப்பது அறிவார்த்த வக்ரப்பார்வையல்லாமல் வேறு ஒன்றுமல்ல.

அனைத்து அநீதிகளையும் தட்டிக் கேட்டு நீதி கிடைக்கச்செய்யும் 'பஞ்சுவல் போராட்டம்' எப்போதுமே கிடையாது அது இல்லவும் இல்லை.

எந்த விவகாரம் தீப்பற்றிக் கொள்ளும் என்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம், அதனை தீரானிக்கவியலாது. எனவே டெல்லி போராட்டத்தை மிகவும் சாதாரணமாகக் கருதும் போக்கை புத்தி ஜீவிகள் கைவிடவேண்டும்.

பாலியல் வன்முறை என்ற ஒன்று பெரிதாகக் கிளம்பும்போது நாம் எப்போதும் சில கேள்விகளை கேட்பதைத் தவிர்க்கவேண்டும். பாலியல் நடவடிக்கையே, பாலியல் உணர்வே இப்படித்தான் மிருகத்தனம் கொண்டது என்று கூறுவது, பெண்கள் ஆடைகளை சரியாக அணியவேண்டும், நள்ளிரவு கிளப்புகளுக்கு போனால் இப்படித்தா நடக்கும் உள்ளிட்ட பாரம்பரியவாத அட்வைஸ்கள், முக்கியமாக இதற்கு முன்னால் நடந்த கற்பழிப்புகளுக்குக் ஏன் இந்த போராட்டம் வெடிக்க வில்லை? இந்த 3 கேள்விகளையும் நாம் தவிர்க்கவேண்டும்.

ஜெயமோகன் கூறுவது போல் "உள்ளே போடி" என்ற குரல்கள்தான் அதிகம் வெளியே வருகின்றன. அல்லது இடது சாரி ரக தலித், பழங்குடியின பெண்களுக்கு ஏன் இத்தகைய குரல்கள் எழும்பவில்லை என்று கேட்பது, அல்லது இன அடிப்படையிலிருந்து இலங்கைத் தமிழ் பெண்களுக்கு நடைபெற்றபோது ஒருவரும் வாயைத் திறக்கவில்லையே என்று கேட்பது இந்தக் கேள்விகளெல்லாம் ஒருவிதமான தப்பித்தல் மனோபாவத்தையே காண்பிக்கிறது.

எங்கு போனாலும் கூட்டம், காரை எடுத்தால் டிராபிக், ஞாயிற்றுக் கிழமை ஆனால் பேமிலியோடு சரவண பவன் சென்றால் கியூ இதிலெல்லாம் வெறுப்படையும் மத்திய தரவர்க்கப்பார்வைதான் டெல்லி போராட்டத்தை எதிர்ப்பதிலும் எழுந்துள்ளது.

'எதுக்கெடுத்தாலும் கூட்டம் கூடிடரானுங்கப்பா' ரக எதிர்வினைதான் இந்த கேள்விகளுக்கு அடியில் ஒளிந்திருக்கும் அங்கலாய்ப்பு மனோபாவமாகும்.

ஊழலுக்கு எதிராக ஒரு போராட்டம் வெடிக்கிறதா அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அனைத்து அநீதிகளையும் பேசும் வாய்ப்பை எடுத்துக் கொள்ளவேண்டும்.

மேலும் கற்பழிப்பு, சுரண்டல் போன்றவற்றிற்கு இனிமேல் லோக்கலான போராட்டங்களே செல்லுபடியாகும். தேசிய அளவில் ஒன்று திரண்டு போராடும் மகா போராட்டங்கள் இனி சாத்தியமில்லை. ராணுவ, போலீஸ் பலம் கொண்டு அது ஒடுக்கப்படும்.

கற்பழிப்பின் ஒவ்வொரு சம்பவத்தையும் தனித்தனியாகப் பார்க்கவேண்டும், பொதுவாக கற்பழிப்பு என்றோ, பொதுவாக பெண்கள் எப்படி இருக்கிறார்கள் என்றோ, பொதுவாக உடல் என்பது என்ன, உணர்ச்சி என்பது என்ன என்றோ யோசிப்பது அபாயகரமான போக்காகும்.

webdunia
FILE
எந்த ஒரு போராட்டத்தையும் வலது சாரி கன்சேர்வேட்டிவ்கள் தங்கள் பிற்போக்குவாத கொள்கைகளை மறுகண்டுபிடிப்பு செய்து கொள்ளும் நிலைக்களமாகப் பார்க்கும் போக்கை கண்டிப்பதாக இருக்கவேண்டும் புத்தி ஜீவிகளின் பார்வைகள். இதனை விடுத்து அப்போது ஏன் இது நடக்கவில்லை, இப்போது ஏன் நடக்கிறது?, ஊடகங்களின் நாடகம், மத்திய தர வர்க்க போராட்டம் என்றெல்லாம் பிராண்ட் செய்வது வலது சாரிகளின் அடக்குமுறை ஆணாதிக்க கொள்கைகள் மேலும் வலுப்பெறவே வழிவகுக்கும்.

டெல்லி கற்பழிப்பு வழக்குக் குற்றவாளிகள் உதிரி தொழிலாளர்களே என்றும் மத்தியதரவர்க்கம் தங்கள் போராட்டம் வழியாக இத்தகைய உதிரித் தொழிலாளர்கள் பற்றிய அச்சத்தையே பரப்புகிறது என்றெல்லாம் பார்ப்பது வர்க்கப்பார்வைக்கு வேண்டுமானால் சரிப்பட்டு வரும். ஆனால் இதுபோன்ற விவகாரங்களில் எந்த ஒரு முன் தீர்மானிக்கப்பட்ட, முன் குறித்த பார்வைகள் சரிபட்டு வராது. அதனை அதாகவே பார்த்து அதிலிருந்து என்ன பெற முடியும், என்ன வருவித்துக் கொள்ளமுடியும் என்றே பார்க்கவேண்டும்.

எல்லாவற்றிற்கும்தான் வர்க்கப்பார்வையோ, வலது சாரிப்பார்வையோ, என்ன எழவுப்பார்வையோ இருந்து தொலைக்கிறதே... இது அறிவுஜீவிகளின் பிரச்சனைப்பாடு. கற்பழிப்பை உண்மையில் ஒரு சமூகத்தத்துவப் பிரச்சனையாக அணுகுவதில் தவறில்லை. அவ்வாறான பார்வை அவசியமே. ஆனால் அந்தப் பார்வை மக்கள் சக்தியின் உடன்பாடான அம்சங்களையும் வர்க்க எதிரி போல் பாவித்து ஒதுக்குவது இன்றைய அரசியலாகாது.

பாலியல் கல்வி வைத்தால் எல்லாம் சரியாகிவிடும், சட்டததை கடுமையாக்கினால் சரியாகிவிடும், தூக்குத் தண்டனை கொடுத்தால் சரியாகிவிடும் போன்ற குரல்கள் பாடாய் படுத்துகிறது.

உண்மையில் பாலியல் கல்வி என்று சொல்லக்கூடாது, பாலின வேறுபாடு (Sexual Difference) பற்றிய தத்துவ/சமுதாயவியல்/உளவியல் பார்வையிலான கல்வியை பாடத்திட்டத்தில் சேர்க்கவேண்டும். சிந்தனையிலும், அறத்திலும் புரட்சி ஏற்பட்டால்தான் ஆண்/பெண் உறவு முறையில் இதுவரை இருந்து வரும் பொத்தாம் பொதுக்கள் குழி தோண்டி புதைக்கப்பட்டு புதிதான, இதுவரை இல்லாத தத்துவப்பார்வை உருவாகி அது பொதுப்புத்திக்குள் நுழைந்து வேர் விடும். இதையெல்லாம் காலம்தன் தீர்மானிக்க்கும் ஆனால் அதற்கான சிந்தனை/செயல் அடித்தளத்தை இப்போதே இடுவதுதான் அறிவு ஜீவிகளின் பணியாக இருக்க முடியும்.

Share this Story:

Follow Webdunia tamil