Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மக்கள் கோவத்தின் அடையாளமே அண்ணா ஹசாரே

இரா.செழியனுடன் நேர்காணல்

மக்கள் கோவத்தின் அடையாளமே அண்ணா ஹசாரே
, சனி, 20 ஆகஸ்ட் 2011 (19:41 IST)
FILE
ஊழலிற்கு எதிரான லோக் பால் சட்டத்தை 10க்கும் மேற்பட்ட தடவைகள் அறிமுகம் செய்தும், அதனை நிறைவேற்றாத காரணத்தினால் அரசின் மீது இந்திய மக்கள் நம்பிக்கை இழந்ததன் வெளிப்பாடே அண்ணா ஹசாரே மேற்கொண்டுவரும் போராட்டத்திற்கு பெருகிவரும் ஆதரவு என்று தலைசிறந்த நாடாளுமன்றவாதியாகத் திகழந்த இரா.செழியன் கூறினார்.

அண்ணா ஹசாரே நடத்திவரும் போராட்டத்திற்கு வலு சேர்க்க வேண்டும் என்று குரல் கொடுத்துள்ள இரா.செழியன், ஜன் லோக்பால் சட்டத்திற்கு உள்ள அவசியத்தை வலியுறுத்த தமிழ்.வெப்துனியா.காம் ஆசிரியர் கா.அய்யநாதனுடன் பேசினார்.

தமிழ்.வெப்துனியா.காம்: ஊழலிற்கு எதிராக அண்ணா ஹசாரே நடத்திவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளீர்கள். அண்ணா ஹசாரேயின் போராட்டத்திற்கு தென் மாநிலங்களில் அந்த அளவிற்கு ஆதரவற்ற நிலையில், தாங்கள் முன்சென்று ஆதரவளித்திருப்பது அந்தப் போராட்டத்தின் மீதான கவனத்தை அதிகரித்துள்ளது. அண்ணா ஹசாரேயின் போராட்டத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள், அதன் அவசியம் என்ன?

webdunia
FILE
இரா.செழியன்: 2ஜி, காமன்வெல்த், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் என்று இந்த நாட்டை உலுக்கிலுள்ள கொடூரமான ஊழல்கள் அனைத்திற்கும் இன்றுள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசே காரணம், பொறுப்பு. இந்தியா விடுதலைப் பெற்றதற்குப் பிறகு இந்த அளவிற்கு பொதுச் சொத்து முன்னெப்போதும் கொள்ளையடிக்கப்பட்டதில்லை. அந்த அளவிற்கு ஊழல் நடந்துள்ளது. இதனால் மக்களுக்கு ஏற்பட்ட கோவத்தின் அடையாளமாகவே அண்ணா ஹசாரே வடிவெடுத்துள்ளார். அவர் ஊழலிற்கு எதிராக தான் பிறந்த மராட்டிய மண்ணில் போராடியவர். இன்று ராம் லீலா மைதானத்தில் ஊழலிற்கு எதிராக அவர் தொடங்கியுள்ள உண்ணாவிரதப் போராட்டம் இந்திய மக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஊழலிற்கு எதிராக பரவலாக உருவெடுத்துவரும் ஒரு பெரும் இயக்கத்தின் வடிவமே இந்த உண்ணாவிரதப் போராட்டமாகும்.

இந்த அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள். 1969ஆம் ஆண்டு முதல் ஊழல் ஒழிக்க உருவாக்கப்பட்ட லோக்பால் சட்ட வரைவு நாடாளுமன்றத்தில் 10 முறை அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால், அது ஒரு அதிகாரமிக்க, முழுமையான சட்டமாக அறிமுகப்படுத்தப்படவும் இல்லை, நிறைவேற்றப்படவும் இல்லை. இதுவே அனைத்துத் தரப்பு மக்களிடையேயும் ஊழலிற்கு எதிரான ஒரு அதிகாரமிக்கச் சட்டத்திற்கான ஆதரவை உருவாக்கியுள்ளது.

webdunia
FILE
இன்றைக்கு இந்தியாவில் வரையறையற்ற ஊழலுக்கு ஊற்றுக்கண்ணாக இந்திய மத்திய அரசே திகழ்கிறது. எனவேதான் அண்ணா ஹசாரே தலைமையிலான அணி, ஊழலை ஒழிக்கக்கூடிய ஒரு வலிமையான சட்ட வரைவை உருவாக்கியது. எனவேதான் இந்தப் போராட்டத்தின் மையமாகத் திகழும் அண்ணா ஹசாரே, ராம் லீலா மைதானத்தில் உரையாற்றுகையில், ஒரு வலிமையான லோக்பால் சட்ட வரைவு உருவாகும் வரை இந்த இயக்கம் தொடரும் என்றும், அது நிறைவேறும் வரை தான் இல்லாவிட்டாலும் போராட்டம் தொடரும் என்றும் கூறியுள்ளார்.

இந்தப் போராட்டத்தின் நோக்கம் இப்போதுள்ள அரசை பதவியில் இருந்து இறக்குவதல்ல, ஆனால், ஊழலுக்கு எதிரான இந்தப் போராட்டத்தை ஒடுக்குவது என்பதில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உறுதியாக உள்ளது. அதே நேரத்தில் மக்களின் கவனம் இந்தப் போராட்டத்தின் மீது ஒருங்கிணைவதைத் தடுக்க அது திசைதிருப்பும் முயற்சியிலும் ஈடுபடுகிறது.

உள்ளபடியே மக்களின் நம்பிக்கையைப் பெற்றதாகத் தங்கள் அரசு உள்ளதென ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நம்புமானால், அது இப்பிரச்சனையை மையமாக வைத்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டும் அல்லது தாங்கள் உருவாக்கிய லோக் பால் சட்ட வரைவின் மீது பொது மக்களிடையே வாக்கெடுப்பு நடத்த முன்வர வேண்டும்.

தமிழ்.வெப்துனியா.காம்: அண்ணா ஹசாரே அணியினர் உருவாக்கியுள்ள ஜன் லோக்பால் வரைவு சட்டமாக்கப்பட்டால் இந்த நாட்டில் ஊழல் ஒழிந்துவிடுமா?

இரா.செழியன்: ஊழலற்ற இந்தியா என்ற இலக்கை நோக்கி நாம் செல்லவதற்கு அப்படிப்பட்ட ஒரு சட்டம் அவசியமாகும். அதன் பிறகு அதனை உண்மையாக நடைமுறைப்படுத்தக்கூடிய வலிமையான அரசு வேண்டும். அதுமட்டுமின்றி, மக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். ஊழலை ஒழிக்கக்கூடிய அந்தச் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை மக்கள் கவனிக்க வேண்டும்.

நல்ல அரசமைப்பு இருந்தால் மட்டுமே போதுமானதல்ல, அதில் 80% ஜனநாயக அமைப்புகளை காப்பதாகக் கூட இருக்கலாம். ஆனால் உண்மையான ஜனநாயகம் என்பது அமைப்பு ரீதியாகத் திரளும் மக்களின் தொடர்ந்த விழிப்புணர்வின் மூலம் மட்டுமே சாத்தியமாகும். இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil